சென்னை: இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்  செய்யப்பட்டு உள்ளது. இதை ஐஐடி தலைவர் காமகோடி தெரிவித்துள்ளார்.

இநத மரபணு தரவுத்தளம் அமைப்பதற்கான   ஆய்வுக்காக, மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர் மற்றும் சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றுடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாக புற்றுநோய் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த கொடிய நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது உலக சுகாதார அமைப்புகளுக்கும், மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தியாவிலும் புற்றுநோய் பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் புற்றுநோய் ஒரு முக்கியமான பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புற்றுநோய் பாதிப்பு முதல்முறையாக ஓராண்டில் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1,00,097 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் 53,542 பேர், ஆண்கள் 46,555 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் (National Cancer Registry Programme) தரவுகளின்படி, இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி 14,61,427 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாகவும், 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு சுமார் 12.8 சதவீதம் அளவிற்கு அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மக்கள்தொகை அதிகரிப்பு, வாழ்வியல் மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவை இந்த அதிகரிப்புக்கான முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், உலகளாவிய அளவில் நடைபெறும் மரபணு ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய புற்றுநோய் நோயாளிகளின் மரபணு தரவுகள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளன. குறிப்பாக, இந்தியாவில் பரவலாக காணப்படும் புற்றுநோய் வகைகளுக்கான முழுமையான மரபணுக் கட்டமைப்பு (Genomic Landscape) இல்லாதது, துல்லியமான நோயறிதல் மற்றும் தனிப்பயன் சிகிச்சை முறைகளை உருவாக்குவதில் பெரும் தடையாக இருந்து வருகிறது.

இந்த குறைபாட்டை நீக்கும் நோக்கில், ஐஐடி மெட்ராஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு ‘புற்றுநோய் மரபணுத் திட்டம்’ (Cancer Genomics Programme) என்ற முக்கியமான ஆராய்ச்சி முயற்சியைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 480 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட திசு மாதிரிகளை பயன்படுத்தி, 960 முழு எக்சோம் வரிசைமுறை (Whole Exome Sequencing) தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய புற்றுநோய் மரபணு ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த ஆய்வுக்காக, மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர் மற்றும் சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றுடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து செயல்பட்டது. இந்திய மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட மரபணு திரிபுகளின் பெயர் குறிப்பிடப்படாத (Anonymized) சுருக்கத் தரவுகள் இதில் சேகரிக்கப்பட்டன.

இந்த ஆய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, ‘பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம்’ (Bharat Cancer Genome Atlas – BCGA) என்ற இந்தியாவின் முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இந்த BCGA திட்டத்தின் முக்கிய அம்சமாக, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் bcga.iitm.ac.in என்ற இணையதள தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திறந்த அணுகல் தரவுத்தளம் (Open-access Database) மூலம், இந்திய புற்றுநோய்களுக்கு உரிய மரபணு திரிபுகளை ஆழமாக ஆய்வு செய்யவும், புதிய நோயறிதல் கருவிகள், துல்லியமான சிகிச்சை முறைகள் மற்றும் தனிப்பயன் மருந்துகள் (Precision Medicine) உருவாக்கவும் வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த முயற்சி இந்தியாவில் புற்றுநோய் ஆராய்ச்சியை உலகளாவிய தரத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கியமான மைல்கல்லாகவும், எதிர்காலத்தில் பிற புற்றுநோய் வகைகளுக்கான மரபணு வரைபடங்களை உருவாக்குவதற்கான அடித்தளமாகவும் அமையும் என மருத்துவ மற்றும் அறிவியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

[youtube-feed feed=1]