சென்னை: கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பண்ணை விவசாயிகள் முத்தரப்பு கூட்டம் நடத்திட வலியுறுத்தியும், கூலி உயர்வு கேட்டும், இலவச மின்சாரம் வழங்கிடவும், தரமான குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் வழங்கிடவும், பிளாங் செக், பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களை விவசாயிகளிடம் வாங்குவதை கைவிட வலியுறுத்தியும்,

தமிழ்நாடு அரசு நலவாரியம் அமைத்து இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து கொடுத்திடவும் கோழிகளை பண்ணையிலிருந்து ஏற்றிய ஒரு வாரத்துக்குள் கம்பெனிகள் பண வழங்கிடவும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல கறிக்கோழி விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டு காலமாக பல வடிவங்களில் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக தொழில்நுட்ப ஆய்வு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 50 முதல் 55 கோடி கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இத்தொழிலில் சுமார் 20 ஆயிரம் பண்ணையாளர்களும், அவர்களுக்குத் தீவனம் மற்றும் குஞ்சுகளை வழங்கும் 66 ஒருங்கிணைப்பாளர் களும் ஈடுபட்டுள்ளனர். சமீபகாலமாக உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் இதர சிரமங்கள் குறித்து பண்ணையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிச.29 மற்றும் ஜன.21 ஆகிய தேதிகளில் கால்நடை பராமரிப்பு இயக்குநர் தலைமையில் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
பண்ணையாளர்களின் கோரிக்கைகளைத் தீர ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிநுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் பண்ணையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசித்து, உள்ளீடுகள், தரம் மற்றும் செலவு, உற்பத்திப் பெருக்கத்துக்கான வழிவகைகள், வளர்ப்புப் பணிகள் மற்றும் பண்ணைச் செயல்பாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நோய்ப்பரவல் மற்றும் மருத்துவ சிகிச்சையிலிருக்கும் இடைவெளி, உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகியவற்றிற்கிடையேயான பிரச்சினை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து கறிக்கோழி வளர்ப்புத் தொழில் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]