சென்னை:  பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு இந்தியன் ரயில்வே வாரியம்  இறுதிகட்ட ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால், விரைவில்  வடபழனி பூந்தமல்லி இடையே ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூவிருந்தவல்லி -வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது. ரயில்வே வாரியம் ஒப்புதலை அடுத்து பிப்ரவரி முதல் பூவிருந்தவல்லி-வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது.   தற்காலிக ஏற்பாடாக, பயணிகளின் வசதிக்காக போரூர் முதல் வடபழனி வரை இடையில் உள்ள எந்த நிலையங்களிலும் நிற்காமல் (Non-stop) மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் போரூர் சந்திப்பு முதல் கோடம்பாக்கம் வரையிலான மீதமுள்ள நிலையங்கள் தயாரானதும், ஜூன் 2026-க்குள் அவை ஒவ்வொன்றாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான 15.8 கி.மீ நீளமுள்ள இந்த மெட்ரோ வழித்தடத்தில்  சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டது. இவை  வெற்றிகராமக முடிந்த  நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு  வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த சேவைக்கு மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதையடுத்து, சென்னை புறநகர் மக்களின் பெரும் எதிர்பார்ப்பான,  பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவைகள் பிப்ரவரியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை மெட்ரோ நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்சேவைக்கு மக்களிடையே பெரும்  வரவேற்பு உள்ளது. மேலும் அதிகரித்து வரும் நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவைகள் புறநகர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.  அதன்படி, மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, 5.5 கி.மீ. நீளமுள்ள வழித்தடம் 4-ல், (Down Line) போரூர் சந்திப்பிலிருந்து வடபழனி வரை மெட்ரோ இரயிலின் சோதனை ஓட்டம் டிசம்பர் 11ந்தேதி அன்று வெற்றிகரமாக நடத்தி, மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஜூன் 2025-ல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரை 9.1 கி.மீ. நீளத்திற்கு 10 நிலையங்களுடன் சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அதன் பிறகு, மெட்ரோ இரயில் நிலைய கட்டுமானப் பணிகள் மற்றும் பிற தொழில்நுட்பப் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது இரயில்வே வாரியத்திடம் இருந்து வேகச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 18, 2025 அன்று இரயில்வே வாரியத்திடமிருந்து தற்காலிக வேகச் சான்றிதழ் (Interim Speed Certificate) பெறப்பட்டது. அதன் பிறகு, மெட்ரோ இரயில் பாதுகாப்பு ஆணையர் (CMRS) 2025, டிசம்பர் 30 மற்றும் 31 தேதிகளில் தனது சட்டரீதியான ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில், இந்திய இரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பிடமிருந்து (RDSO) கூடுதல் அறிக்கையை கோரியுள்ளார். அந்த அறிக்கை கிடைத்தவுடன், இரயில்வே வாரியத்தின் நிரந்தர வேகச் சான்றிதழ் (Permanent Speed Certificate) முறைப்படி பெறப்படும்.

இதனைத் தொடர்ந்து, திட்டப் பாதையை ஆய்வு செய்யவும், அந்தப் பாதையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இரயில்களை இயக்குவதற்கான பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளவும் மெட்ரோ இரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் (CMRS) கோரிக்கை வைக்கப்படும். அவர் ஏதேனும் மாற்றங்களை பரிந்துரைத்தால், அவை சரிசெய்யப்படும். பின்னர், அந்தப் பிரிவில் பயணிகள் சேவைகளைத் தொடங்குவதற்கான அனுமதியை பெற இந்த முன்மொழிவு இரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்படும்.

அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன், பயணிகள் இரயில் சேவைகள் முறைப்படி தொடங்கி வைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இத்தகைய சட்டரீதியான விதிமுறைகள் அவசியமானவை. அரசு ரீதியான அனுமதிகள் அனைத்தும் 2026 ஜனவரி இறுதிக்குள் கிடைக்கும் என்றும், பிப்ரவரி மாதத்தில் மெட்ரோ இரயில் சேவைகளைத் தொடங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், போரூர் முதல் வடபழனி வரையிலான அடுத்த கட்டப் பகுதியில் சுமார் 4 கி.மீ. நீளமுள்ள சவாலான இரட்டை அடுக்கு (Double Decker) மேம்பாலப் பணிகள் உள்ளதால் இப்பகுதியை ஜூன் 2026-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான பகுதி மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால், பயணிகளுக்கு முதல் கட்ட மெட்ரோ வழித்தடங்களுக்கு நேரடி அணுகல் கிடைக்காது என்பதாலும்;

பயணிகளின் எண்ணிக்கை போதுமான அளவு அதிகமாக இருக்காது என்றும், இந்த புதிய வழித்தடம் பயணிகளுக்கு முழுமையாகப் பயனளிக்காது என்றும் கருதப்பட்டது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதிகளை பெறுவதற்குத் தேவைப்படும் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும், பயணிகளின் நலனுக்காக, வழித்தடம் 4-ல் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைக்கு முன்னுரிமை அளித்து, இடைப்பட்ட நிறுத்தங்கள் ஏதுமின்றி, போரூர் சந்திப்பிலிருந்து வடபழனி வரை மெட்ரோ இரயில் சேவைகளை நீட்டிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஒரு தற்காலிக ஏற்பாடாக, பயணிகளின் வசதிக்காக போரூர் முதல் வடபழனி வரை இடையில் உள்ள எந்த நிலையங்களிலும் நிற்காமல் (Non-stop) மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் போரூர் சந்திப்பு முதல் கோடம்பாக்கம் வரையிலான மீதமுள்ள நிலையங்கள் தயாரானதும், ஜூன் 2026-க்குள் அவை ஒவ்வொன்றாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

போரூர் சந்திப்பிலிருந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான வழித்தடத்தில் (Down line) மேம்பாலப் பணிகள், தண்டவாளம் அமைத்தல் மற்றும் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்தது மற்றும் இந்த வழித்தடத்தில் முதல் மெட்ரோ இரயில் இயக்கப்பட்டதையும் இன்றைய நிகழ்வு குறிக்கிறது. இன்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸிலிருந்து போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் (Upline) சோதனை ஓட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

போரூர் சந்திப்பிலிருந்து வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான உயர்மட்ட வழித்தட பணிகளை, ஏற்கனவே திட்டமிடப்பட்டப்படி ஜூன் 2026-க்கு முன்னதாகவே முடிப்பது என்பது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் சவாலான பணிகளில் ஒன்றாகும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக, கடந்த நான்கு மாதங்களாக, கடுமையான இட நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பெரும்பாலும் இரவு நேரங்களிலும் தீவிரமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து,  பிப்ரவரி மாதத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]