சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தனதுஎம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். இதையடுத்து அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழல் பெருச்சாளியான அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின்மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு (2025) அமலாக்கத் துறை அவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவை புத்தாண்டு கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன. இநந்த நிலையில், அதிமுக எம்எல்ஏவான ஓபிஎஸ் ஆதரவாளர் இன்று காலை, சட்டமன்ற அலுவலகத்தில், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும்ம் அளித்தார்.
ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது வைத்திலிங்கமும் தி.மு.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் அரசியல் அனாதையாக இருந்து வருகிறார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ். அவரை அதிமுகவில் இணைக்க எடப்பாடி மறுத்து வரும் நிலையில், அவரை வேறு எந்தவொரு கட்சியும் சீண்டுவதாக இல்லை. இதனால், அவருடன் உள்ள ஆதரவாளர்கள், மாற்றுக்கட்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் பலரும் மாற்றுக்கட்சியில் ஐக்கியமான நிலையில், இன்று வைத்திலிங்கமும் திமுகவில் ஐக்கியமாகிறார்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார்.
ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரோடு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாட்டின் முன்னாள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஊழல் பெருச்சாளியான அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு அரசின் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையின் விசாரணை தொடங்கப்பட்டது.
வைத்தி லிங்கம் தனது அமைச்சர் பதவிக் காலத்தில், மெஸ்ஸர்ஸ் ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் இருந்து ₹27.90 கோடி லஞ்சம் பெற்றதாக DVAC குற்றம் சாட்டியது. ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்திற்குத் திட்ட அனுமதி வழங்கியதற்கு ஈடாக இந்த பெரும் தொகை பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை, வைத்தி லிங்கத்தின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து முழுமையான விசாரணைக்கு வழிவகுத்தது.
தீவிரமான விசாரணை மூலம், லஞ்சப் பணத்தை மோசடி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிக்கலான திட்டத்தை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியது. ஸ்ரீராம் குழும நிறுவனங்களால் நிலம் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த நிதி, உண்மையில் ரியல் எஸ்டேட் வாங்குவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இந்த பணம் பல போலி நிறுவனங்கள் வழியாகச் செலுத்தப்பட்டு, பின்னர் மெஸ்ஸர்ஸ் முத்தம்மாள் எஸ்டேட்ஸின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இந்த விரிவான ஏற்பாடு, பரிவர்த்தனைகளின் உண்மையான தன்மையை மறைத்து, லஞ்சப் பணத்தை திருச்சியில் பல்வேறு சொத்துக்களை வாங்கப் பயன்படுத்த அனுமதித்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு (2025) ஜனவரி 9, அன்று, ஆர். வைத்தி லிங்கத்திற்கு எதிராக அமலாக்கத்துறை (ED) உறுதியான நடவடிக்கை எடுத்தது. அதன்படி, வைத்திலிங்கத்திற்கு சொந்தமான , ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. அவருக்கு முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்தச் சொத்துக்கள், பணமோசடி தடுப்புச் சட்டம், 2002-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை, வைத்திலிங்கம் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்த தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாகும். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]