டெல்லி: பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றார்.

இந்த பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் போட்டியிடாத நிலையில், நிதின் நவீனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அவருக்கு எதிராக யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக தேசிய செயல்தலைவராக நியமிக்கப்பட்டதும் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிதின் நவீன் .
ஐந்து முறை பிகார் சட்டப்பேரவை உறுப்பினரான நிதின் நவீன் பாஜக தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையடுத்து, பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக முந்தைய தலைவர் ஜெ.பி. நட்டா தனது பொறுப்புகளை புதிய தலைவர் நிதின் நவீனிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்பட கட்சி மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிந்த போதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், பிஹார் மாநில அமைச்சராக இருந்த நிதின் நபின் (45), கட்சியின் செயல் தலைவராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 12-வது தலைவரை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான வேட்புமனு ஜனவரி 19ந்தேதி பெறப்பட்டது. அப்போது நேற்றுவரை தலைவராக இருந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நிதின் நபின் சார்பில் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி டாக்டர் கே.லட்சுமணிடம் வழங்கினர். அப்போது மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், புபேந்திர யாதவ், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் நிதின் நபின் சார்பில் மேலும் ஒரு தொகுப்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், புஷ்கர் சிங் தாமி, நயாப் சிங் சைனி, பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதுபோல, பிஹார், ஆந்திரா, மகாராஷ்டிரா, அசாம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட இதர மாநில பாஜக தலைவர்களும் நிதின் நபின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கல் முடிந்ததை அடுத்து, கட்சியின் தேசிய தேர்தல் அதிகாரி லட்சுமண் வெளியிட்ட அறிக்கையில் , நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாஜக தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. இதில் 50 சதவீத மாநில தேர்தல் முடிந்ததும் தேசியத் தலைவர் தேர்தலை நடத்தலாம் என்பது கட்சி விதி. அதன்படி, 30 மாநில தலைவர் தேர்தல் முடிந்த நிலையில், தேசிய தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கின.
கடந்த ஜனவரி 16-ம் தேதி இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. 19-ம் தேதி (நேற்று) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில், இப்போதைய செயல் தலைவர் நிதின் நபின் சார்பில் மொத்தம் 37 மனுக்கள் பெறப்பட்டன. அவை அனைத்தும் உரிய படிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள, செல்லத்தக்க மனுக்கள் என்று பரிசீலனையில் கண்டறியப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவி ஏற்றார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், “சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு மலையில் நடைபெற்ற புனித கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்க்கட்சிகள் எப்படித் தடுக்க முயன்றன என்பதை நாம் பார்த்தோம். இது ஒன்றும் முதல் நிகழ்வு அல்ல; எதிர்க்கட்சிகள் மற்ற விஷயங்களையும் தடுக்க சதி செய்துள்ளன.
சமீபத்தில் ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய எப்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதையும் நாம் பார்த்தோம். இன்று, நாம் சோமநாதரைப் பற்றிப் பேசி, இந்த பெருமைக்குரிய விழாவைக் கொண்டாட முயற்சிக்கும்போது, எதிர்க்கட்சிகளில் உள்ளவர்கள் அமைதியற்றவர்களாக உணர்கிறார்கள். இதுபோன்ற மரபுகளைத் தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.
ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் இந்திய அரசியலில் இடமில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என கூறினார்.
[youtube-feed feed=1]