சென்னை: வேளச்சேரியில் உணவு டெலிவரி ஊழியர்மீது இரண்டு பேர் கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை என்று
மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவதை தன் சாதனையாக முதல்வர் கருதுகிறாரா, இதுதான் திமுக அரசின் சாதனையா என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் பார்த்திபன் என்ற இளைஞரை இருவர் அரிவாளால் வெட்டிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வேளச்சேரியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அந்த வழியாக வந்த உணவு டெலிவரி நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிக் கொடூரமாகத் தாக்கும் காணொளி வெளியாகி வைரலானது. இதை பார்ப்போர் நெஞ்சம் பதைபதைக்கிறது.
சமீபத்தில் திருவள்ளுர் ரயில் நிலையத்தில், வடமாநில நபரை சில சிறுவர்கள் கஞ்சா போதையில், சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னையில், அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது, மக்களிடையேஅதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 23). இவர் Zepto-வில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்தார். பார்த்திபன் வேளச்சேரி ஜே.என் நகர் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் விரட்டி வந்துள்ளனர்.
திடீரென அவரை மறித்து கத்தி, அரிவாளால் இருவரும் கீழே தள்ளி வெட்ட ஆரம்பித்தனர். குடியிருப்புக்கு மத்தியில் வைத்து இருவரும் கை, கால் நெற்றியில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் பார்த்திபன் வேண்டாம் விட்டு விடுங்கள் என கெஞ்சியுள்ளார். மேலும் வலியால் அலறி துடித்துள்ளார்.
இந்த சத்தம் கேட்டதும் குடியிருப்பு வாசிகள் ஒரு சேர ஓடி வந்து கற்கள், கட்டைகளை கொண்டு கத்தி, அரிவாள் வைத்திருந்த நபர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து பொதுமக்கள் பார்த்திபனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் தான் அவர்கள் இருவரும் பார்த்திபனை வெட்டியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இருவரும் அரிவாளால் டெலிவரி ஊழியரை வெட்டியது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் வைத்து டெலிவரி ஊழியரை இரண்டு பேர் கீழே தள்ளி நெற்றி, கை, கால்களில் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

திமுக அரசின் கடந்த நான்கரை ஆண்டு ஆட்சி காலத்தில், அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், குடியிருப்புப் பகுதிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகள் என எங்கு திரும்பினாலும் கடும் போதையில் கொடும் ஆயுதங்களால் ஒருவரை ஓடஓட விரட்டி வெட்டுவதும், குத்திக் கொலை செய்வதும், காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. குற்றவாளிகளுக்கு போதையும் திமிரும் துணிச்சலும் தலைக்கேறி, ஆளும் அரசின் மீது முற்றிலுமாக பயம் விட்டுப்போய்விட்டது. திமுக அரசின் காட்டாட்சியில் எப்பொழுது யாருக்கு என்ன நடக்குமோ என்ற பதற்றத்திலேயே மக்கள் தங்கள் நாட்களைக் கழிக்க வேண்டியிருக்கிறது.
மக்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுமளவிற்குத் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது என்றாலே, ஆளும் அரசு அரியணையில் நீடிக்கத் தகுதியில்லை என்பது தான் பொருள். ஆனால், “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களோ, தனது இரும்புக்கரம் மொத்தமாகத் துருப்பிடித்து இத்துப்போய்விட்டது என்பதை அறியாமல் “நாடு போற்றும் நல்லாட்சி” என்ற கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் இனி தொடரலாமா? என சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் பதிவில், ”சென்னை வேளச்சேரியில் நேற்று, மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் நபரான பார்த்திபன் என்பவர் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி என்பது நெஞ்சை பதைக்க வைக்கிறது. இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களே? தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. நான்கரை ஆண்டுகளாக நான் எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது. இப்படி மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா இன்றைய பொம்மை முதலமைச்சர்? காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும், போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். பார்த்திபனை தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]