மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து மதியம் சுமார் 11 மணி அளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார்.

மதுரையில் இருந்து கார் மூலம் வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்லும் வழியில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு சென்ற முதலமைச்சரை விழா குழுவினர் உள்பட அதிகாரிகள், அமைச்சர் வரவேற்று, மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அமர்ந்து, வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் மிரட்டிய காளையின் உரிமையாளருக்கு தங்க மோதிரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவித்தார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாரின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.* ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் மாடுபிடி வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என்றவர், ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணி வழங்கப்படும் என்றார். மேலும் அலங்காநல்லூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100-க்கும் மேற்பட்ட காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். சிறந்த காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக துணை முதலமைச்சர் சார்பாக ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பாக ஒரு காரும் வழங்கப்படுகிறது. 2-வது பரிசுபெறும் காளை உரிமையாளருக்கு கன்று குட்டியுடன், நாட்டு பசுமாடும், வீரருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்படவுள்ளது. 3-வது இடம் பிடிக்கும் வீரருக்கு இ-ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.
[youtube-feed feed=1]