சென்னை: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? கேட்டு போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பாரா என்பது குறித்து, இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடப்போகும் அறிவிப்பை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் இன்று அறிவிக்க உள்ள அறிவிப்பு 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு ஒரு காரணமாக அமையும் என்பதையும் மறக்க முடியாது.
திமுக கடந்த 2021 தேர்தல் சமயத்தில் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். மேலும், அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவது, தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் என்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக அரசுக்கு, ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துகின்றன.
குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி நீண்டகாலமாக பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்தே, ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முடிவு செய்தது.
இதனிடையே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் டிசம்பர் 6ம் தேதி முத காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டா ஜியோ போன்ற அமைப்புகள் அறிவித்தன.
இதுதொடர்பாக கூட்டமைப்பு பிரதிநிதிகளை அழைத்து, அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் அடங்கிய குழு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அதில் முடிவு ஏதும் எட்டாப்படாத நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதேநேரத்தில் தான் ககன்தீப் சிங் தலைமையிலான குழு, தங்களது அறிக்கையை அரசிடம் தாக்கம் செய்தது. அதனடிப்படையில், மீண்டும் தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு அடங்கிய குழு, கூட்டமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக சனிக்கிழமை அதாவது ஜன.3ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக, பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டா ஜியோ ஆகிய அமைப்பினர் தெரிவித்தனர்.
பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தில் உள்ள 6.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அதன் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் 48 ஆயிரம் முன்னாள் அரசு ஊழியர்களுக்கும் பலனளிக்கும் விதமாக, பழைய ஓய்வூதிதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுவாரா? என்பதே தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதன்படி இன்று முதல்வர் அறிவிப்பு வெளியிடுகிறார். இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியை பாதுகாத்துக் கொள்ள இந்த நடவடிக்கையை திமுக கையிலெடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால், அரசுக்கு மிகப்பெரிய நிதிசுமை ஏற்படும் என்று, ஏற்கனவே தமிழக அரசு தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]