சென்னை:  அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான  ஜே.சி.டி.பிரபாகர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெக கட்சியில் இணைந்தார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி. பிரபாகர், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 2011ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வானவர் ஜே.சி.டி.பிரபாகர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டார். மேலும்,  அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலும் செயல்பட்டு வந்தார்.

ஏற்கெனவே ஓபிஎஸ் அணியிலிருந்து மனோஜ் பாண்டியன் விலகி திமுகவில் அண்மையில் இணைந்தார். தற்போது அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு ஆதரவாளர் விலகியிருப்பது ஓ.பி.எஸ் அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜே.சி.டி.பிரபாகர்,  “முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை சந்தித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை, தற்போது விஜய்யை சந்தித்தபோதும் பெற முடிந்தது. கட்சி பொறுப்பு ஏதும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தவெகவில் இணைத்துள்ளேன். அதிமுக ஒருங்கிணைப்புக்கு முயன்றேன். அது நடைபெறவில்லை. இனி அந்த முயற்சி வெற்றி பெறாது. வரும் நாட்களில் மேலும் பலர் தவெகவில் இணைவார்கள். தமிழகத்தில் மக்களின் ஆதரவு விஜய்க்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைந்தார். அதன் பின்னர் அதிமுக முகாமில் இருந்து பலர் தவெக பக்கம் வருவார்கள் என அவர் சொல்லியிருந்த நிலையில், ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்துள்ளார். ஜே.சி.டி பிரபாகரின் மகன் அமலன், தவெகவில் ஏற்கெனவே இணைந்து கட்சி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]