சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என கோரி, போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக அரசுக்கு கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் மறைந்த கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தபிறகாவது தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்த நிலையில், அது நிறைவேறாதன நிலையில், தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது அரையாண்டு விடுமுறை காலம் என்பதால், இடைநிலை ஆசிரியர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
. இன்று எழிலகத்தி முற்றுகையிட மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள்- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரணியை தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள் மெரினா காமராஜர் சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காமராஜர் சாலையில் பேரணி சென்ற இடத்தில் ஆசிரியர்களை தடுத்து நிறுத்திய போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். பேரணியாக சென்றபோது காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் கோரி போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் கோரி போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும்.
கடந்த 2009 ஜூன் 1-க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8,370 வழங்கப்படுகிறது. அதே சமயம் அந்த தேதிக்குப் பிறகு 2009-ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,200 வழங்கப்படுகிறது. இந்த முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த மூன்று நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்த ஊதிய முரண்பட்டால் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் கூறி வருகின்றனர். எனவே போராடுகின்ற ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், போராடும் 1,400 ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]