உ.பி.யை விட தமிழ்நாடு அதிக கடன் வாங்கியிருப்பதாக பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டதற்கு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று அவர் கூறினார். கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற வசதிகள், நலத்திட்டங்கள் அமல்படுத்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால் உத்தரப் பிரதேசம் இன்னும் பல மனித வளர்ச்சி குறியீடுகளில் பின்னடைவை சந்தித்து வருவதாகவும், நிறுவன அடிப்படையிலான ஆட்சி மாற்றாக ‘புல்டோசர் ராஜ்’ அரசியலை முன்னிறுத்துவதாகவும் விமர்சித்தார்.

கடன் என்பது தனியாக பார்க்க வேண்டிய விஷயம் அல்ல; அதன் மூலம் கிடைக்கும் விளைவுகளும் முக்கியம் என்றார். தமிழ்நாட்டில் பெற்ற கடன்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், பொது போக்குவரத்து, மின்சார உற்பத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் நீண்டகால உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவை மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மனித வள மேம்பாட்டிற்கும் உதவியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் மத்திய அரசின் நிதி கொள்கைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் ஜோதிமணி எம்.பி. சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு அதிக வரி வழங்கும் மாநிலமாக இருந்தும், மத்திய அரசின் நிதி பகிர்வில் குறைவாகவே பெறுகிறது என்றும், உ.பி. போன்ற மாநிலங்களுக்கு அதிக ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் கூறினார். இயற்கை பேரிடர்கள் மற்றும் எஸ்.எஸ்.ஏ. போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் கூட தமிழ்நாட்டுக்கு உரிய நிதி தாமதமாகவும் மறுக்கப்பட்டும் வந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

எனவே கடனை விவாதிக்கலாம், ஆனால் சூழலுடன் சேர்த்தே பார்க்க வேண்டும் என்றும், வளர்ச்சி விளைவுகள், ஒருவருக்கு வரும் வளர்ச்சி அளவுகள், வரி பங்களிப்பு – நிதி பகிர்வு, ஆட்சித் தரம் ஆகிய அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாடு இன்னும் முன்னிலையில் தான் உள்ளது என்று ஜோதிமணி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]