அகர்பத்தி (தூபக்குச்சி) தயாரிப்புக்கு புதிய இந்திய தரநிலையை (BIS Standard) மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், அகர்பத்தி தயாரிப்பில் பயன்படுத்தக் கூடாத ஆபத்தான ரசாயனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் தினம் 2025 முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், இந்த புதிய தரநிலை நுகர்வோரின் பாதுகாப்புக்காகவும், பொறுப்பான மற்றும் நிலையான உற்பத்தியை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அகர்பத்திகள் இந்தியாவின் மத, கலாச்சார வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றவை. வீடுகள், கோயில்கள், தியான மையங்களில் அவை பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ₹8,000 கோடி மதிப்புள்ள தொழிலாக இது உள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகர்பத்திகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், சில செயற்கை வாசனை ரசாயனங்கள் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கவலை எழுந்துள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அகர்பத்தி உற்பத்தியாளரான இந்தியா ₹1,200 கோடி மதிப்பில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்தத் துறை கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள், சிறு தொழில்முனைவோர், MSME நிறுவனங்களுக்கு ஆதாரமாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.

இந்நிலையில், மூச்சுத்திணறல், அலர்ஜி, நரம்பு பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற கவலைகள் அதிகரித்திருப்பதை அடுத்து அகர்பத்திகளுக்குப் புதிய BIS தரநிலையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய BIS தரநிலையின்படி, அகர்பத்திகள் – இயந்திரத்தில் தயாரிக்கப்படுவது, கையால் தயாரிக்கப்படுவது, பாரம்பரிய மசாலா அகர்பத்திகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மூலப்பொருட்கள், எரியும் தரம், வாசனை தரம் மற்றும் ரசாயன அளவுகள் குறித்த தெளிவான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
அலெத்ரின், பெர்மெத்ரின், சைபர்மெத்ரின், டெல்டாமெத்ரின், ஃபிப்ரோனில் போன்ற பூச்சிக்கொல்லி ரசாயனங்கள்
பென்சில் சயனைடு, எத்தில் அக்ரிலேட், டைபீனில் அமீன் போன்ற செயற்கை வாசனை ரசாயனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இந்த ரசாயனங்கள் மனித உடல்நலம், வீட்டுக்குள் காற்றுத் தரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், பல நாடுகளில் ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன அல்லது தடை செய்யப்பட்டுள்ளன.
புதிய தரநிலையை பின்பற்றும் அகர்பத்திகள் BIS தர முத்திரையை பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் நுகர்வோர் நம்பிக்கை உயர்வதுடன், நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் ஒரே தரத்திலான பொருட்கள் கிடைக்கும் எனவும் உலக சந்தைகளில் இந்திய தயாரிப்புகளுக்கு வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]