சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  அரசுடன் ரூ.3,250 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவில் 2021ல் உள்நாட்டு கார் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் இந்தியாவில் தொழிற்சாலையில் தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஃபோர்டு கார் நிறுவனம் அங்கு மீண்டும் உற்பத்தியை தொடங்கும் வகையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் ஒப்பந்தம் போட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டை நோக்கி நாள்தோறும் நிறுவனங்கள் முதலீடு செய்ய படையெடுத்து வருகின்றன. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று வெற்றி பெற்றுள்ளோம். உலக அளவில் வர்த்தக போர் நடக்கும் இப்போதைய சூழ்நிலையில் ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது.

ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்குள்ள சிகாகோ நகரில்,  ஃபோர்டு நிறுவன உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் பேச்சு நடத்தினார். இதையடுத்து,  ரூ.3,250 கோடி முதலீடுடன்  ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில்  ரீ-என்ட்ரி கொடுக்கிறது.

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம்  தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் உறுதியாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு தொழிற்சாலையை மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஏற்றுமதிக்கான உயர் ரக எஞ்சின்களை உற்பத்தி செய்யவும் சுமார் ரூ.3,250 கோடி ($370 மில்லியன்) முதலீடு செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் பலத்த இழப்பைச் சந்தித்த நிலையில், ஆலையை முடிய நிலையில், தற்போது மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.3,250 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து,  சென்னையின் புறநகர் பகுதியான,  தமிழ்நாட்டில் உள்ள மறைமலை நகர் உற்பத்தி தளம், ஏற்றுமதி சந்தைகளுக்காக ஆண்டுக்கு 200,000 யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தி செய்யும் உயர்நிலை எஞ்சின்களை உருவாக்க மறுசீரமைக்கப்படும் என அறிவித்துள்ளது. விரைவில் இது குறித்த  அதிகாரப்பூவர்க அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு நிறுவனம் முதன்முதலில் 1995 இல் சென்னைக்கு அருகில் உற்பத்தியைத் தொடங்கியது. ஆனால், வெளியேறும் நேரத்தில், ஃபோர்டு மொத்தம் $2 பில்லியனுக்கும் அதிகமான இழப்புகளைச் சந்தித்தது. பின்னர் அது குஜராத்தில் உள்ள சனந்த் வாகன ஆலையை டாடா மோட்டார்ஸுக்கு விற்றது. அங்கு டாடா இப்போது மின்சார வாகனங்களை உருவாக்குகிறது.

2020 ஆம் ஆண்டில், ஃபோர்டின் முக்கிய அமெரிக்க போட்டியாளரான ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தியது. ஆனால், சமீபத்தில் அரசியல் பதற்றம் இருந்தபோதிலும், ஆப்பிள் போன்ற பிற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தி இருப்பை வளர்த்து வருகின்றன. ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐந்து இந்தியத் தொழிற்சாலைகளில் ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக விளங்குவதுடன்,  நீண்டகால ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது. ஏற்கனவே,   ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், ரெனால்ட் எஸ்ஏ மற்றும் பிஎம்டபிள்யூ ஏஜி ஆகியவற்றின் உற்பத்தி வசதிகளும் இங்கு உள்ளன. இந்தச் சூழலில் ஃபோர்டின் இந்த ரீ-என்ட்ரி, மாநிலத்தின் ஆட்டோமொபைல் மையத்தின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.