சென்னை: தனியார் மயம் – நிரந்தர பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் இன்று  எழும்பூர் ராஜாஜி திடலில் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.

சென்னை எழும்பூர் இராஜாஜி திடல் மைதானம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்டலம் 5 மற்றும்  மண்டலம் 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் பல தூய்மை பணியாளர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குக் காரணம், தங்களின் பணியை தனியார்மயமாக்குவதைத் தடுக்க வேண்டும், நீண்ட காலமாகப் பணிபுரிந்த தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மற்றும் தங்களின் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என்பன போன்ற முக்கியக் கோரிக்கைகளாகும். குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் உள்ள சில மண்டலங்களில் தூய்மைப் பணிகள் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதால், இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.  இவர்களின் போராட்டம் சென்னை மாநகராட்சி எதிரே உள்ள சாலையோரத்தில் தொடர்ந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர்.  அவர்களுக்காக குரல் கொடுத்த சில வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருந்தாலும், காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சாது  அவ்வப்போது தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர்.  தீபாவளியையொட்டி, கருப்பு தீபாவளி என போஸ்டர் அடித்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.  இதனால், திமுக அரசு, அவர்களை மகிழ்ச்சி படுத்த அவர்களுக்கு மூன்று வேலையும் இலவசமாக சோறு போடுவதாக அறிவித்துள்ளது. இருந்தாலும், அவர்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக நின்று போராடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். எழும்பூர் இராஜாஜி திடல் காவல் மைதானம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தங்களது கோரிக்கைமீது திமுகஅரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், தங்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்க வரும் வாய்ப்பு இருப்பதால், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.