சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வரும் 12ந்தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மத்தியஅரசு சார்பில் நடத்தப்படுகிறது.

‘நல்வாழ்விற்கான இரு துளிகள், போலியோ இல்லா வெற்றிநிலை தொடரட்டும்’ என்ற தலைப்பில் இந்த ஆண்டு தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
நாடு முழுவதும் அக்டோபர் 12 ஆம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு பல்ஸ் போலியோ பிரச்சாரத்தை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. இதில், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் 12ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில், நடத்தப்படுகிறது. அந்த பகுதிகளில் உள்ள அரசு நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு இடங்களில், இந்த முகாம்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாம்களில், 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் அடுத்தக்கட்டமாக சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்