சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதன்படி 10 கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இப்போதே வணிக நிறுவனங்களில் களைகட்ட தொடங்கி உள்ளன. புதிய துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சொந்த பந்தங்களுக்கு இனிப்பு காரம் வழங்கி மகிழ்விக்கவும் தயாராகி வருகின்றனர்.
இமந்த நிலையில், இனிப்பு, கார வகைகளை வாங்குவார்கள் என்பதால், அதற்கான இனிப்பு / காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
1. உணவு பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2. உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 -ன் படி குற்றமாகும். மேலும் உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 63-ன் படி ரூ. 10 லட்சம் அபராதமும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிகக வாய்ப்பு உள்ளது.
3. பால் பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும், பால் அல்லாத பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும் தனித்தனியே பொட்டலமிடுதல் வேண்டும்
4. உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட தரமான எண்ணெய் / நெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு… முக்கிய விதிகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
5. உணவு மூலப்பொருட்களை பலகையின் மீது மூடிய நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
6. பேக்கிங் செய்யப்படும் உணவு பொட்டலங்கள் உணவு பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
7. Gift Box -களில் பேக்கிங் செய்யப்படும் இனிப்பு, காரம், உலர்ந்த பழங்கள். கொட்டைகள் (Nuts) போன்ற பொட்டலங்கள் கண்டிப்பாக லேபிள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
8. உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.
9. உணவு கையாளபவர்கள் வெற்றிலை புகையிலை மெல்லுதல், புகை பிடித்தல், எச்சில் உமிழ்தல் போன்ற செயல்பாடுகள் உணவு தயாரிக்கும் வளாகத்தில் அனுமதிக்க கூடாது. பணியாளர்கள் அனைவரும் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.
10. உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நிறுவனங்களுக்கு ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கு உரிய பதில் அளிக்கும் வகையில் பயிற்சி பெற்ற பொறுப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு சம்மந்தமான மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்ட WhatsApp NO. 94440 42322 & TNFSD Consumer App என்ற செயலி மூலம் தெரிவிக்கவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.