அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்த, இரண்டு முறை ஜெயலலிதாவுக்கு பதிலாக முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். மேலும் சில அதிமுக அமைச்சர்களுகும் இதே கதிதான். இது குறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில் என்னதான் நடக்கிறது? கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மீதெல்லாம் அவ்வப்போது பல்வேறு புகார்கள் வெளிவந்தன. குறிப்பாக மின்துறை அமைச்சர் மீது பல கோடி ரூபாய் ஊழல் புகார்கள் எல்லாம் பூர்வாங்க ஆதாரங்களுடன் கூறப்பட்டன. அப்போதெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா அவற்றைக் கண்டு கொள்ளாமல் பாராமுகமாகவே இருந்தார். தற்போது என்ன நிலைமை?
அன்றாடம் நாளேடுகளைப் பிரித்தால் வருகின்ற செய்திகள் எத்தகையவை? அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில், ஏன் இரண்டு முறை நீதிமன்ற நடவடிக்கைகளால் ஜெயலலிதா பதவியிலிருந்து இறங்க வேண்டிய நேரத்தில் முதலமைச்சராகவே இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். இன்றும் அவர்தான் நிதியமைச்சர். ஆனால் அவருடைய கதி என்ன? அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஜெயலலிதா வாய்மொழி உத்தரவு உளவுத் துறைக்குப் பிறப்பித்து, அவர்கள் பன்னீர்செல்வத்திற்கு எங்கெங்கே எவ்வளவு சொத்து, என்னென்ன முறைகேடுகளைச் செய்திருக்கிறார், எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருவதாக அவருடைய ஆதரவாளர்கள் வசூலித்த பணம் எத்தனை கோடி என்ற விவரங்களையெல்லாம் திரட்டியிருக்கிறார்களாம்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி செய்த தவறால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாகமுத்து என்ற பூசாரி கடிதம் எழுதி விட்டு உயிர் துறந்தது பற்றி எதிர்க்கட்சிகள் குறைகூறிய போது அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? கிடையாது. இன்று அதே ஓ.பி.எஸ்.சின் மகன்கள் செய்கின்ற தவறுகள் பற்றி புலனாய்வுத் துறை ஆராய்ந்து அறிக்கை கொடுக்கிறதாம்.
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன் ஆகிய மூன்று அமைச்சர்களும் மாநிலம் முழுதும் பலரிடம் எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருவதாக கோடி கோடியாக வசூல் செய்திருப்பதெல்லாம் அன்றாடம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று அமைச்சர்களும் சென்னையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று “கார்டன்” உத்தர விட்டுள்ளதாம். அதோடு, இவர்கள் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை ஆணையாம்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க. மீனவர் பிரிவு துணைச் செயலாளர் டி.ரமேஷ், வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக், தேனி மாவட்டம் எல்லப்பட்டி முருகன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள் சின்னையா, தண்டரை மனோகரன், விஜயபாஸ்கர், தாம்பரம் கரிகாலன், வரகூர் அருணாசலம் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. நத்தம் விசுவநாதனின் நெருங்கிய நண்பரான பழனி நகரச் செயலாளர், கே.மாரியப்பன் பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.எம்.பாபுவின் மாவட்டச் செயலாளர் பதவியும், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்த டி.ஆர்.என்.வரதராஜன், தேனி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்த ஆர்.ஆர்.ஜெகதீஸ், ஆண்டிப்பட்டி ஒன்றியம் மாவட்டப் பிரதிநிதி பொறுப்பில் இருந்த எம்.ராஜ்குமார் ஆகியோர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
ஓ.பன்னீர்செல்வத்தின் நிழல் என்று வர்ணிக்கப்பட்டு வந்த சீனி கந்தசாமி, போயஸ் கார்டன் முன்னாள் ஊழியர் ரமேஷ்குமார், சிவகாசியைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், நீலாங்கரையில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து, மாநிலம் முழுவதும் பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உதவியுடன் ஏராளமானவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளதாகத் தெரிவித்தனர். அவர்கள் மூவரும், நாங்கள் அப்பாவிகள், எங்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுத்தனர், முழுப் பணத்தையும் மேலிடத்தில் கொடுத்து விட்டோம், ஏராளமானவர்களிடம் நாங்கள் பணம் வாங்கிக் கொடுத்துள்ளோம் என்று கூறியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஓரங்கட்டி, சென்னையில் முடக்கி வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவருடைய நெருங்கிய நண்பர் செல்லமுத்து, கடமலை மயிலை ஒன்றியத் தலைவர் முருக்கோடை ராமர் இல்லத் திருமணங்கள் எல்லாம் அவருடைய தலைமையிலேதான் நடைபெறுவதாக இருந்தாலுங்கூட, கலந்து கொள்ளவில்லையாம். அந்த அழைப்பிதழ்களில் கூட வழக்கமாக இடம் பெறும் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெறவில்லையாம். திருமணத்தில் கலந்துகொள்ள பயணம் புறப்பட்ட பிறகு, ரத்தாகி விட்டதாம்.
“அமைச்சர் ஓ.பி.எஸ். எங்கே?” என்றே நாளேடு ஒன்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், “தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு ஆட்சி மேலிடத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து, அவர் தொடர்பான வதந்திகள், நாலாபுறமும் றெக்கை கட்டிப் பறக்கின்றன. குறிப்பாக “வாட்ஸ்-அப்”யில் அவர் பற்றிய செய்திகள், நொடிக்கொரு முறை வந்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அமைச்சர் பங்களாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும்; சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் “வாட்ஸ்-அப்” மூலம் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான தோப்பில் உள்ள பங்களா ஒன்றில் அவர் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி பரப்பப்பட்டுள்ளது” என்று “தினமலர்” இன்று எழுதியுள்ளது.
நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்களான திண்டுக்கல் தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் தர்மலிங்கம், சாணார்பட்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மணி என்கிற சுப்பிரமணி, நத்தம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ் ஆகியோரது பதவிகள் பின்னர் பறிக்கப்பட்டன. இதில் மேட்டுக்கடை செல்வராஜ், நத்தம் விஸ்வநாதனின் மருமகனும், மாவட்டப் பொறுப்பாளருமான கண்ணனின் நெருங்கிய நண்பர். கண்ணனின் பினாமி என்று அழைக்கப்படுபவர்.
தூத்துக்குடியில் அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியை தூத்துக்குடி போலீசார் கைது செய்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சிப் பதவிகள் முதல் வேலைவாய்ப்பு, டிரான்ஸ்பர் ஆகிய பணிகளுக்கு கிருஷ்ணமூர்த்தி பணம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகத் தரப்பட்ட புகாரின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.சின் பினாமியாகச் செயல்பட்ட அரசு ஒப்பந்தக்காரர், ஆர்.எஸ்.முருகன் மீது பாளை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அவர் தலைமறைவாக உள்ளார்.
இந்தச் செய்திகள் பற்றி அரசின் விளக்கம் என்ன? இதே அமைச்சர்கள், மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் மீதும் எதிர்க்கட்சிகள் கடந்த ஐந்தாண்டு காலமாக புகார்களையெல்லாம் அடுக்கடுக்காக எடுத்துக் கூறிய போது அதைப் பற்றி முதலமைச்சர் காதில் போட்டுக் கொண்டாரா? தற்போது அந்தப் புகார்கள் எல்லாம் உண்மை என்று ஆகி விட்ட நிலையில், இதற்காக இந்த அரசாங்கம் மக்களுக்குத் தருகின்ற விளக்கம் என்ன? தற்போது வெளிப்படையாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் ஜெயலலிதா வழக்கமாக நடத்தும் கபட நாடகங்கள்தானா? நாட்டு மக்களை ஏமாற்றித் திசை திருப்புவதற்காக போடுகின்ற நய வஞ்சகக் கூத்துகளா?
ஆனால் ஜெயலலிதாவின் இந்த நாடகங்களைக் கண்டு ஏமாறுவதற்கு நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! ஜெயலலிதா நடத்திய இதுபோன்ற பழைய நாடகத்தை ஏற்கனவே கண்டு பின்னணிக் கதைகளைப் புரிந்து கொண்டவர்கள். ஏன் தற்போது ஜெயலலிதா உடன் வாழ்கின்ற சசிகலா பற்றியே ஜெயலலிதா என்ன சொன்னார்? எப்படி நடந்து கொண்டார்? நாட்டிற்குத் தெரியாதா? சசிகலா வெளியேற்றம், மீண்டும் அடைக்கலம் என்பனவெல்லாம் நாடகத்தின் காட்சிகள் என்பது புரியாதா?
27-8-1996 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,
“ஒரு குடும்பத்தோடு எனக்கிருந்த தொடர்பை மையப்படுத்தி கடந்த சில மாதங்களாக எனக்கு எதிராக எழுந்த கழகத்தினர் சிலரின் விமர்சனம், பத்திரிகைகளின் கேலி, எதிர்மறையான அரசியல் விமர்சனங்கள் ஆகியன குறித்து, இன்று என் நிலையை வெளிப்படையாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கழகச் செயற்குழுக் கூட்டத்தில் எனது உரையில் தோல்விக்குக் காரணமாக நான் குறிப்பிட்டிருந்த சில காரணங்களுள் முக்கியமானதொரு காரணமாக ஒட்டுமொத்தமாக எல்லோராலும் கூறப்படும் காரணம், எனக்கும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்குமிடையே இருந்த தொடர்பேயாகும். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு அதிகார மையமாகவும், சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அதிகார வட்டமாகவும் செயல்பட்டு வந்துள்ளார்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிப் பத்திரிகைகள் ஏராளமாக எழுதியுள்ளன. பொது மேடைகளிலும் தெருமுனைகளிலும் இக்குடும்பத்தைப் பற்றி பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. இவற்றில் சில உண்மைச் சம்பவங்களும் செய்திகளும் உண்டு. சசிகலா என் வீட்டிலேயே தங்கியிருந்ததால் அவரது உறவினர்கள் சிலரது விமர்சனத்திற்குரிய நடவடிக்கைகள் எனது அனுமதியோடும் ஆதரவோடும்தான் நடைபெற்றன என்ற தவறான அபிப்பிராயத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்தது. எனவே கட்சி பெரிதா? அல்லது சசிகலாவுடனான தொடர்பு பெரிதா? என்று நான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என கழக உடன்பிறப்புகள் வற்புறுத்துவதால் அனைவரது விருப்பத்திற்கேற்ப சசிகலாவோடும் அவரது குடும்பத்தினரோடும் எனக்கு இருந்த தொடர்புகள் அனைத்தையும் இந்த நாள் முதல் விலக்கிக் கொள்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் முதல் எனக்கு வளர்ப்பு மகன் என்று எவரும் கிடையாது என்பதைத் திட்டவட்டமாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன்பிறப்புகளின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க சசிகலாவிடமிருந்தும், சுதாகரனிடமிருந்தும் என்னை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது” என்று ஏதோ கட்சியையும், தனது வீட்டையும் சுத்திகரிக்க முனைந்து முடிவெடுத்து விட்டவரைப் போல ஜெயலலிதா வேடம் போட்டாரே! நாட்டு மக்கள் மறந்தா விட்டனர்?
இவ்வாறு நாடகத்தில் வரும் தனி மொழியைப் (Dramatic Monologue) போல எழுதப்பட்ட கடிதத்திற்கு எத்தனை நாட்கள் உயிர் இருந்தது? அந்தக் கடிதத்தில் எழுதியவற்றில் எத்தனை நாட்கள் ஜெயலலிதா உறுதியோடு இருந்தார்? “மீண்டும் பழைய குருடி, கதவைத் திறடி” என்பதைப் போல மறுபடியும் சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவோடு இணைந்து ஒரே வீட்டில் வாழத் தொடங்கினார்களே; அந்த ஓரங்க நாடகமாவது நீடித்ததா? சில மாதங்களுக்குப் பிறகு, நாடகத்தின் திடுக்கிடும் திருப்பமாக சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஓர் அறிக்கை. அவரது கணவரே கைது. மற்றும் நெருங்கிய உறவினர்கள் கைது. தொடர்ச்சியாக ஏடுகளிலே செய்தி. பின்னர் சசிகலாவை மீண்டும் சேர்த்துக் கொண்டார். அவரது கணவர் சிறையிலிருந்து வெளியே வந்து, “நான் பொய்ப் புகாரில் கைது செய்யப்பட்டேன். புகார் கொடுத்தவர்களே தற்போது திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். என்னை “என்கவுண்டர்” செய்ய காவல் துறை முயற்சி செய்தது” என்றெல்லாம் கோபம் கொப்பளிக்கச் செய்தியாளர்களிடம் சொன்னார். பின்னர் அவரது கோபமும் குறைந்து, கரைந்து அந்த வழக்கு அப்படியே நீர்த்துப் போய் விட்டது.
இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு பழகிப் போன சம்பவங்கள்; ஏனென்றால் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட காட்சிகள்! அவற்றை நினைவூட்டும் நிகழ்வுகள்தான் தற்போது மீண்டும் தேர்தலையொட்டி காட்சிப்படுத்தப்படுகின்றனவா?
ஓர் அரசில் அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு. அமைச்சர்கள் தவறு செய்தால், அந்தத் தவறுகளுக்கு முதலமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த ஐந்தாண்டு காலத்தில் எத்தனை முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்? அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள் என்றால், அமைச்சர்கள் தவறுகளும் முறைகேடுகளும் செய்த காரணத்தால்தான் மாற்றப்பட்டார்கள்.
அப்படி மாற்றப்பட்ட அமைச்சர்கள் சிலரே பிறகு மீண்டும் அமைச்சர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அப்படியென்றால் அவர்கள் ஏற்கனவே செய்த தவறு என்ன ஆயிற்று? முறைகேடுகள் செய்த அமைச்சர்களை நீக்குவதும், பின்னர் அந்த முறைகேடுகள் மக்களுக்கு மறந்து போனதும் மீண்டும் சேர்த்துக் கொள்வதும் தொடர்ந்து நடந்ததுதானே? பொதுமக்களின் நினைவாற்றல் குறைவானது (Public Memory is short) என்பதை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? ஓர் அமைச்சரவையில் தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்தக் கட்சியின் செயல்பாடு எத்தகையது? அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா? ஓர் ஆட்சியிலே உள்ள அமைச்சர்களைப் பற்றி எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது என்பது ஆச்சரியமல்ல.
ஒரு அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களைப் பற்றி, ஆட்சியினரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கின்ற நேரத்தில், அந்த அரசைப் பற்றி தனியே விளக்கம் வேறு கூறிட வேண்டுமா? தொடர்ச்சியாக நடக்கும் நாடகங்களைப் பற்றியும் இந்த வேடிக்கை வினோதங்களைப் பற்றியெல்லாம் உடன்பிறப்பே, பொதுமக்களிடம் விளக்கம் அளித்து நினைவூட்டிட வேண்டியது உன்னுடைய கடமை அல்லவா? ஏற்கனவே இது பற்றியெல்லாம் நாட்டு மக்களிடம், அவர்கள் புரிந்து கொள்ளும்படி, புரிந்து கொண்டதை நினைவிலே வைத்துக் கொள்ளும்படி நீ விளக்கிக் கொண்டிருப்பாய் என்பதை நான் நன்கறிவேன். இருந்தாலும் உன்னோடு தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது என்னுடைய பணி அல்லவா? அந்த அளவில் தான் இதையெல்லாம் உன் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இன்னும் நடக்கப் போகின்ற வேடிக்கைகள், வினோதங்கள், ஏமாற்று நாடகங்கள் ஏராளம், ஏராளம்! வரப்போகின்ற காட்சிகளையும் – அவற்றின் உட்பொருளையும் சேர்த்துப் பொதுமக்களிடம் கொண்டு போய்த் தெளிவுபடுத்த வேண்டியது உன்னுடைய கடமை! அந்தக் கடமையைக் கச்சிதமாய் ஆற்றிடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே உண்டு’’ என்று கூறியுள்ளார்.