அகமதாபாத் : MAYDAY… MAYDAY… MAYDAY…. NO POWER… NO THRUST… GOING DOWN என அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானி விமானி, விபத்து ஏற்படுவதற்கு சில மணித்துளிகள் முன்பு அலறிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் ஜூன் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே அகமதாபாத் நகரின் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மெகானி பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைக்க மற்ற அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த பகுதி அரசு மருத்துவ கல்லூரி அமைந்துள்ள இடம் என்பதால், மருத்துவர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்கு வழிவகுத்த காரணங்களை ஆராய்வதற்காக ஒரு உயர் மட்ட பல்துறை குழுக்களை மத்தியஅரசு அமைத்துள்ளது.
இந்த விமான விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பலர், அதிர்ஷ்டவசமாக விமான பயணத்தை தவற விட்டதால் உயிர் பிழைத்தேன் என்று கூறி வரும் நிலையில், விமானம் விபத்துக்குள்ளா சில மணித்துளிகள் முன்பு, அவசரகால அழைப்பு விடுத்துள்ள தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளாகும் முன் விமானியின் அவசர அழைப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளாவதற்கு முன் “மேடே, மேடே, நோ பவர்” என கடைசியாக விமானி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தை இயக்கிய பைலட் சுமீத் சபர்வால் அகமதாபாத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். விமானத்தை மேலெழுப்ப முடியவில்லை எனக் கூறியவாளே “மேடே மேடே” என அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்ற விமான கட்டுப்பாட்டு அறை அவருக்கு பதில் கூறுவதற்கு முன்பு, விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேடே என்ற அழைப்பான, இது மிகவும் அவசரமான சூழ்நிலை அல்லது நிலைமை கைமீறிச் செல்லும்போது பயன்படுத்தப்படும் வார்த்தை. இது, ‘மெய்டர்’ என்ற பிரெஞ்சு சொற்றொடரிலிருந்து வந்தது, அதாவது, ‘எனக்கு உடனே உதவுங்கள்’ என்பதே இதன் நோக்கம்.
1920ல் பயன்பாட்டுக்கு வந்த இந்த, ‘மே டே’ அழைப்பு, இப்போது உலகளவில் ஒரு நிலையான நெறிமுறையாக உள்ளது. மிகவும் அவசரமான சூழ்நிலையில் விமானி எளிதாகச் செய்தியை அனுப்பவும், அனைவருக்கும் நிலைமையின் தீவிரம் புரியும் வகையிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ரேடியோ தொலைத்தொடர்பில் கேட்பவருக்கு சிக்னல் பலவீனமாக இருந்தாலும் புரியும் வகையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8,200 மணி நேர விமான அனுபவமும், துணை விமானி கிளைவ் குந்தருக்கு 1,100 மணி நேர விமான அனுபவமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.