சென்னை

கொரோனா தொற்றால் சென்னையில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளநிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருந்ததால் இதற்காக கீமோதெரபி சிகிச்சையில் அவர் இருந்து வந்தார். மேலும் சர்க்கரை நோய் மற்றும் நடுக்குவாதம் (பார்க்கின்சன்) பாதிப்பும் இருந்தது நிலையில், அவருக்கு இதய செயலிழப்பும் ஏற்பட்டதால் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் கடந்த மாதம் 29-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று (செப்சிஸ்) ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டு புற்றுநோய் மற்றும் இதய செயலிழப்புக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு அதில் மூதாட்டிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 1-ந் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.