சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று தடுக்கப்பட்டு கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் கொரோனா தொற்று பரவல் தொடங்கி உள்ளது. சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவல் உள்ளது தெரிய வந்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிப்பதற்கு, கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடு JN.1 தான் காரணம் என்றும், இது வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின் படி இந்தியாவில் தற்போது 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாகவும், அவற்றில் 53 பேர் மும்பையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம். காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள டாக்டரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம் என்று கூறப்படுகிறது. மேலும் சில மருத்துவமனைகள் மற்றும் மால்களில் முகக்கவசம் அணிந்து வரும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.