பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் தந்ததாக ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ள காவல்துறை அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இருந்தாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.

2023 ஆம் ஆண்டு விசாவுக்கு விண்ணப்பிக்க பாகிஸ்தான் தூதரகம் சென்ற ஜோதி அங்கு பணிபுரியும் டேனிஷ் என்று அழைக்கப்படும் எஹ்சான்-உர்-ரஹீமுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சென்றுள்ள ஜோதி, டேனிஷின் கூட்டாளியான அலி அஹ்வானையும் சந்தித்தார், அங்கு அவர் ஜோதி தங்குவதற்கு ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது.
தவிர, ஷகிர் மற்றும் ராணா ஷாபாஸ் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்களை ஜோதிக்கு அஹ்வான் அறிமுகப்படுத்தியுள்ளார். குறிப்பாக, ஷாபாஸின் தொலைபேசி எண் ஜோதியின் மொபைல் தொடர்புகளில் ‘ஜட் ரந்தாவா’ என்று சேமிக்கப்பட்டதாக FIRல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளின் (PIOக்கள்) கட்டுக் கதைகளை பரப்ப சமூக ஊடக செல்வாக்கு மிக்கவர்களை தேடிவந்த நிலையில் அவர்களின் வலையில் சிக்கிய ஜோதி மல்ஹோத்ரா PIOக்களுடன் தொடர்பில் இருந்ததுடன் அவர்களின் கைப்பாவையாக செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும், இரண்டு முறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்த ஜோதி, சீனாவிற்கும் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், இந்த ஆண்டு துவக்கத்தில் அதாவது பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு சில மாதங்கள் முன்னதாக அவர் பஹல்காம் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு முக்கிய தகவல் வழங்கிய நபராக ஜோதி மல்ஹோத்ரா இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் நடைபெற்று இரண்டு நாள் கழித்து பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் ஜோதி மல்ஹோத்ரா ஏற்கனவே வெளியிட்ட ஒரு வீடியோவில் இருந்தது தற்போது தெரியவந்துள்ளதை அடுத்து இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.