எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது.

இதையடுத்து நாளை நாடு முழுவதும் போர்கால முன்னெச்சரிக்கை ஒத்திகையை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

54 ஆண்டுகள் கழித்து (இதற்கு முன்னர் 1971ல் நடந்தது) இந்தியாவில் நாளை (மே 7) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

எதிரிகள் தாக்கும்போது பொதுமக்கள், மாணவர்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ளுதல் மற்றும் பதற்றமான சூழலில் மக்களை எப்படி வெளியேற்றுவது, தாக்குதலில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்தப்படும்.

தவிர, திடீர் முழு மின்தடை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாகவும் பயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஒத்திகையின் போது மொபைல் நெட்ஒர்க்குகள் செயலிழக்க நேரிடும் என்றும் மின் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதுடன் இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.