இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூலக்கூடிய அச்சம் எழுந்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட அனைத்துவிதமான தாக்குதலை சமாளிக்கவும் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபடவும் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நாளை மே 7ம் தேதி இந்த பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

வான் தாக்குதல் தொடர்பான அபாய எச்சரிக்கை மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
1971ம் ஆண்டு போருக்குப் பின் முதல் முறையாக நாட்டின் 259 ராணுவ மாவட்டங்களில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட இருப்பதை அடுத்து மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர்.
இந்த பயிற்சியில், ஹோம் கார்ட், என்.சி.சி. உள்ளிட்ட அமைப்பினர் தவிர மாணவர்களும் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கல்பாக்கம் ஆகிய இடஙக்ளில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் 31 இடங்களில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.
இதையடுத்து ராஜஸ்தானில் 28 இடங்களிலும், அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 20 இடங்களிலும் பயிற்சி நடைபெறுகிறது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மக்களிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.