டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் காலமானார். அவருக்கு வயது 79.
முன்னாள் மத்திய மந்திரி கிரிஜா வியாஸ் -க்கு உதய்பூரில் உள்ள தனது வீட்டில் நடந்த கங்கூர் பூஜை சடங்கின் போது தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த கிரிஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் மற்றும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கிரிஜா வியாஸ் (79), ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் வசித்து வந்துள்ளார். கடந்த மார்ச் 31-ம் தேதி அவரது வீட்டில், நடந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவருடைய துப்பட்டாவில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால், அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து, உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் பின்பு, அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
மறைந்த திருமதி வியாஸ் 1977 ஆம் ஆண்டு உதய்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1985 முதல் 1990 வரை ராஜஸ்தானில் அமைச்சராக இருந்தார், மேலும் 1991 இல் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.வி. நரசிம்ம ராவ் அரசாங்கத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சராகவும், பின்னர் 2013 முதல் 2014 வரை மன்மோகன் சிங் அரசாங்கத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
திருமதி கிரிஜா வியாஸ், மூன்று முறை முன்னாள் எம்.பி.யாகவும், இரண்டு முறை உதய்பூர் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். மேலும், மாநில மற்றும் மத்திய அரசுகள் இரண்டிலும் அமைச்சராகப் பணியாற்றினார், மேலும் ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் குழுவின் தலைவராகவும் இருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். அவர் தனது கடைசித் தேர்தலில் 2018 ஆம் ஆண்டு உதய்பூர் நகர சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார், அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியின் குலாப் சந்த் கட்டாரியாவிடம் தோல்வியடைந்தார்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே.சி. வேணுகோபால், மற்றும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் திருமதி வியாஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருமதி வியாஸ் நான்கு தசாப்தங்களாக காங்கிரசுக்கும், பல்வேறு அரசியலமைப்பு மற்றும் நிறுவனப் பணிகளிலும் பொது சேவைக்கு அர்ப்பணித்ததாக கார்கே, X இல் ஒரு பதிவில் கூறினார். கல்வி, சமூக நீதி மற்றும் குறிப்பாக பெண்கள் அதிகாரமளித்தல் ஆகிய துறைகளில் திருமதி வியாஸின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்று திரு. காந்தி கூறினார். “அவரது மறைவு நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்று அவர் கூறினார்.
கிரிஜா வியாஸ், இறுதிச்சடங்கு உதய்ப்பூரில் நடக்கிறது.