டெல்லி: பாகிஸ்தான் மீதான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில்,  பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்  நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு கேபினட் ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும்,  ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த (ஏப்ரல்) 22-ம் தேதி சுற்றுலா பயணிகள், குறிப்பாக இந்து பயணிகளை சுட்டுக் கொன்றனர்.  இந்த நிகழ்வில் மொத்தம் 28 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கம்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறையின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி தலைமையில் கடந்த (ஏப்ரல்)  23-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், ’பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும். சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் படையினர் அவ்வப்போது எல்லைக்கேட்டு பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி வரும் நிலையில், இந்திய ராணுவம், அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், காஷ்மீர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு,   பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்திய கேபினட் கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தான் மீது சில பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.