சென்னை: மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், கேரள கவர்னருக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்துள்ள வழக்கை உச்சநீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

மாநில அரசுகளுக்கும், மாநில கவர்னர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஏற்கனவே தமிழ்நாடு அரசு நிறைவேற்றி மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி மறுத்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. இது விவாதப்பொருளாக மாறி வருவதுடன், மத்தியஅரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மாநில  ஆளுநருக்கு உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் 4 மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் தாமதம் செய்தார். அதாவது,  2021 ஆம் ஆண்டு கேரள சட்ட மன்றம் நிறைவேற்றிய மூன்று பல்கலை கழக மசோதாக்கள், 2022 கூட்டுறவு சங்கங்கள் மசோதா ஆகிய 4 மசோதாக்களை கேரள ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். இதனை எதிர்த்து கேரள அரசு 2023 ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தது.

தற்போது கேரளாவில் புதிய ஆளுநர் பதவி ஏற்றும் அந்த 4 மசோதாக்கள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன. அவரும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், கேரள அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜாய்மாலா பாக்ஷி அமர்வில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழ்நாடு அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டி வாதிட கேரள அரசு தரப்பு வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]