மகாகும்பமேளா நிகழ்வில் கலந்துகொள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் பயணிகள் முண்டியடித்ததில் பலர் மரணமடைந்தனர்.

பிப்ரவரி மாதம் அரங்கேறிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது ஹோலி பண்டிகைக்காக டெல்லி ரயில்நிலையத்தில் மீண்டும் கூட்டம் அலைமோதுகிறது.

வடமாநிலங்களில் மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகைக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றனர்.

இதற்காக டெல்லியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற அசம்பாவிதம் போன்ற எந்தவொரு நிகழ்வும் ஏற்படாமல் இருக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களை மூடியுள்ள ரயில்வே நிர்வாகம் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ரயில் நிலைய வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதுடன், இந்த கூடாரங்களில் 16 டிக்கெட் கவுண்டர்களை அமைத்து முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது.

இந்த டிக்கெட் கவுண்டர்கள் தவிர 11 தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷின்களையும் வைத்துள்ளது.

சிறப்பு ரயில்கள் அனைத்தும் புது தில்லி ரயில் நிலையத்தின் பிளாட்ஃபார்ம் எண் 16ல் நிறுத்த ஏற்பாடு செய்துள்ளது.

இதனால் அந்தந்த ரயிலுக்கான பயணிகள் மட்டும் ரயில் வருவதற்கு சிறிது நேரம் முன் அந்த பிளாட்பாரம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

முன்பதிவு செய்தவர்கள் மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேவேளையில், ரயில்வே நிர்வாகத்தின் இந்த அதீத கட்டுப்பாடுகளால் கோபமடைந்துள்ள பயணிகள் சிலர், சிறப்பு ரயிலுக்கு செல்லும் பயணிகளை மட்டும் வரிசையில் நிறுத்தாமல் மற்ற பிளாட்பாரத்தில் வேறு ரயிலுக்கு முன்பதிவு செய்த நபர்களையும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க செய்வது தேவையற்றது என்று விமர்சித்து வருகின்றனர்.