சென்னை
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,
“They have to come to the terms of the Indian Constitution” என்கிறார் மத்திய கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை ‘rule of law’ என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? என அவரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!
“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது” என்று பிளாக் மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்…”
என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம் பி ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.