சென்னை: இந்திய அளவில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு என்றும்,  தமிழ்நாடு தனித்து தெரியும்  என கடந்த 2009ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு  வென்ற தமிழரான  வெங்கி ராமகிருஷ்ணன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  தமிழ் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள நோபல் பரிசு வெற்றியானரான வெங்கி ராமகிருஷ்ணன், இந்திய அளவில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், எந்த அளவீடுகளை எடுத்துக்கொண்டாலும், வட மாவட்டங்களை விட தென்மாவட்டங்கள்தான் சிறப்பாக செயல்படுகின்றன என்றார்.

தமிழ்நாட்டில், மாநில அரசு , குறிப்பாக பெண் உரிமை, பெண் சுகாதாரம், குழந்தைகள் நலன், கல்வி உள்பட பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என திராவிட கட்சிகள்தான் சில பல ஆண்டுகளாக ஆட்சிசெய்து வருகின்றன. இவைகள் மக்களுக்கான திட்டங்களை முழுவதுமாக மாற்றாமல், அதை மேம்படுத்துகிறார்கள், இருந்தாலும் தமிழ்நாடு இன்னும் சில விஷயங்களில் முன்னேற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் கூறினார்.

தென்இந்தியாவை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு முன்னேற அனுமதித்தால், தெற்கு ஆசிய நாடுகளுக்கு இணையாக தென்இந்தியா வளரும் என்றவர், மற்ற மாநிலங்களை ஒப்பிட்டால், நிச்சயமாக தமிழ்நாடு தனித்து தெரியும் என்றும் கூறினார்.

முன்னதாக,  ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்,  ரகுராம் ராஜன் அறிக்கையின் படி, தமிழ்நாடு மூன்றாவது முன்னேறிய மாநிலம். தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு. குறியீடு 0.4க்கு கீழ் முன்னேறிய மாநிலம் என குறிப்பிட்டிருந்ததார். அதே வேளையில், “மக்களுக்கு இலவசங்களை அரசாங்கம் வழங்கலாம். ஆனால், அதைப் பெறுபவர்கள் ஏழை மக்களாக மட்டுமே இருக்க வேண்டும். இலவசங்களின் பலன்கள் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

இலவசங்களின் பலன்கள் இன்னாருக்குத்தான் என்றில்லாம் இலக்கற்றுப் போகும்போதுதான் பிரச்சினை எழுகிறது. அதேபோல் யார் மக்களுக்கு அதிக இலவசங்களை தருவது என்று போட்டாபோட்டி போட்டால் அது ஆபத்தானது. அவ்வாறாக இலவசங்கள் வழங்கப்பட்டால் அது அரசை திவாலக்கலாம் என்றும் எச்சரித்திருந்தார்.

தற்போது தமிழ்நாடு அரசு இலவசங்களை வாரி வழங்கி வருவதால்,  கடன் சுமையில் சிக்கி தள்ளாடுகிறது. இதனால், தமிழ்நாடு அரசு திவாலாகும் நிலைக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய அளவில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடுதான்  நோபல் பரிசு வெற்றியாளர் வெங்கி ராமகிருஷ்ணன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.