சென்னை: தமிழக கோயில்களின் வளர்ச்சிக்கு இதுவரை ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்றும் கோயில்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
‘இந்து சமய அறநிலையத் துறையின் மோசமான நிர்வாகத்தால் தமிழகத்தில் கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,900 கோடி வரை இழப்பு – ஆலய வழிபடுவோர் சங்கம் குற்றச்சாட்டு’ என்ற தலைப்பில் பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறநிலையத் துறை செய்தி வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்று பின்னர் 38 மாவட்டங்களுக்கு 38 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு, கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை 8,511 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோயில்களின் நிர்வாகமும் அறங்காவலர்களால்தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில்களில் செயல் அலுவலர்கள் பூஜை மற்றும் மத ரீதியான சடங்குகள் எதிலும் தலையிடுவதில்லை. மண்டல, மாநில வல்லுநர் குழுவின் ஒப்புதலோடு, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, உரிய அனுமதி பெற்று, கோயில் நிதி, அரசு மானியம், ஆணையர் பொது நலநிதி, உபயதாரர் நிதி மூலமாக கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படியே ஒப்பந்தம் கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் அங்கீகரிப்பட்டு வருகின்றன. அறநிலையத் துறையின் கீழ் 8,321 கோயில்கள் மட்டுமே, வருமானத்தின் அடிப்படையில் 5 முதல் 12 வரை சதவீதம் நிர்வாகச் செலவினங்களுக்காகவும், 1.5 முதல் 4 சதவீதம் வரை தணிக்கை செலவினங்களுக்காகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நிதி வசதியில்லாத இதர கோயில்களுக்கு இத்தொகை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. தற்போது வரை 916 கோயில்களுக்குச் சொந்தமான, ரூ.7,127.25 கோடி மதிப்பிலான 7387.79 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோயில் சொத்துக்கள் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்பட வேண்டும் என்று தெரிவித்திருப்பது, எவ்வித ஆதாரமும் இல்லாத, உண்மைக்குப் புறம்பான தகவலாகும். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அறநிலையத்துறையின் அசையா சொத்துக்கள் மூலம் ரூ.945.68 கோடி வருவாய் ஈடுபட்டப்பட்டுள்ளது.
மேலும், 98 கற்சிலைகள், 230 உலோக சிலைகள், 11 மரச்சிலைகள், 4 மரகதலிங்கங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்களின் உபரிநிதி முதலீடு கடந்த ஆட்சியைவிட 1.06 மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.5515.54 கோடி மதிப்பில், 12,202 கோயில்கல் 23,234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 3,493 கோயில்களில், ரூ.1,260.76 கோடி மதிப்பிலான பணிகள், உபயதாரர் நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் 2,378 கோயில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், 1,000 ஆண்டுகளுக்கு பழமையான 274 கோயில்களை புனரமைக்க ரூ.300 கோடி நிதியை அரசு மானியமாக வழங்கியுள்ளது.
அதேபோல, திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 21 கோயில்களுக்குச் சொந்தமான, ரூ.880 கோடி மதிப்பிலான 1,100 கிலோ தங்ககட்டிகள் தங்க முதலீட்டு திட்டத்தின் கீழ் வைப்பீடு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் ரூ.18 கோடி வட்டி வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில்களின் வருவாய் அரசால் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. கோயில்களின் வளர்ச்சிக்காகவும், பராமரிப்புக்காகவும் அரசால் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கோயில்களுக்கு ரூ.8,37.14 கோடி அரசு நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் விவரம்…
அறநிலையத் துறையின் மோசமான நிர்வாகத்தால் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,900 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது, அதனால் கோயில்கள் நியாயமான அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கோடிக்கணக்கில் வருமானம் வரும் பழநி கோயிலுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் புதிதாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய அறங்காவலர் களாவது, எந்த அதிகாரமும் இல்லாத செயல் அதிகாரியிடமிருந்து கோயில் நிர்வாகத்தை கையில் எடுப்பார்களா என்ற கேள்வியை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் எழுப்பியுள்ளார் ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ்
தமிழகத்தில் 44,286 கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பொதுவாக, செயல் அலுவலர்களை தக்கார்களாக அசாதாரண சூழலில் 90 நாட்களுக்கு மட்டுமே நியமிக்க முடியும். செயல் அலுவலர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்தான். உண்டியல் வசூலை காரணம்காட்டி, எந்த கோயிலையும் அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.
கோயில் சொத்துகளை பாதுகாத்து, வருமானம் ஈட்டும் பொறுப்பு மட்டுமே செயல் அலுவலர்களுக்கு உள்ளது. தவிர, கோயில் நிர்வாகத்திலோ அல்லது பூஜை, மத ரீதியிலான சடங்குகளிலோ தலையீடு செய்ய சட்ட ரீதியாக எந்த தார்மீக உரிமையும் அறநிலையத்துறைக்கு கிடையாது.
கேரளாவில் தந்திரி எடுக்கும் முடிவுகள்தான் இறுதியானவை. ஆந்திராவிலும் அரசு நிர்வாகம், கோயிலின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. தமிழகத்திலும் கோயில் நிர்வாகம் தொடர்பான அனைத்து அதிகாரமும் அறங்காவலர்களின் கையில் தான் உள்ளது. ஆனால் அதை அறநிலையத் துறை தர மறுக்கிறது.
தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்கு செயல் அலுவலர்கள் எந்த அடி அடிப்படை யில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும். அதற்கான உத்தரவு எங்கே என்றும் கேட்டால், தேடிப் பார்க்கிறோம் என்று அறநிலையத்துறையிடமிருந்து பதில் வருகிறது.
1951 முதல் சட்ட ரீதியாக செல்லாத, காலாவதியாகிப் போன சட்டப் பிரிவுகள் மூலம் 608 செயல் அலுவலர்களைக் கொண்டு, தமிழக கோயில்களை அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் டெண்டர் விட்டு வருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 31-ஏ (1) (பி) பிரகாரம், எந்த நிறுவனத்தையும் அரசு 3 ஆண்டுகள் வரை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முடியும். தற்போது அறநிலையத்துறை 12 சதவீதத்தை நிர்வாகக் கட்டணமாகவும், 4 சதவீதத்தை தணிக்கை கட்டணமாகவும் கோயில் வருவாயில் இருந்து எடுக்கிறது. இது உலகில் எங்குமே இல்லாத ஒன்று. கடந்த 2023 வரையிலான ரூ.1,500 கோடி முறைகேடு தொடர்பான 18 லட்சம் தணிக்கை ஆட்சேபங்கள் இதுவரை தீர்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 5.25 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் இருந்த நிலையில், தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும். அதிலும் 1.04 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லை எனவும் கூறுவது அசாதாரணமானது.
இந்த சொத்துகளின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு வருவாய் ஈட்ட வேண்டிய சூழலில் தற்போது ரூ.100 கோடி மட்டுமே வருவாய் ஈட்டி வருவதாக தணிக்கையில் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் குறைந்த பட்சம் ஆண்டுக்கு ரூ.5,900 அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
திருடு போன சிலைகள்:
யானைக்கு நீச்சல் குளம், நினைவு மண்டபம், வணிக வளாகம், கலாச்சார மையம், திருமண மண்டபம், கல்லூரிகள் ஆகிய வற்றை கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப் போகிறோம் என்று அறநிலையத் துறை கூறுகிறது. அனைத்தும் கோயில் பணம். ஆயிரக்கணக்கில் தொன்மையான சிலைகள் திருடுபோய் உள்ளன. அவற்றை இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை.
நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு கோயில் பணம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வருமானத்துக்கான டிடிஎஸ் தொகையை வசூலிக்காமல் விட்டதில் மட்டுமே நூற்றுக்கணக்கான கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் திறமையின்மை காரணமாகவே இதெல்லாம் நடந்து வருகிறது.
எனவே தான் கோயில் பொறுப்புகளை இறை நம்பிக்கையுள்ள, நேர்மையான, அப்பழுக்கற்ற, அரசியல் தொடர்பு இல்லாத அறங்காவலர்களிடம் ஒப்படையுங்கள் என வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.