திண்டிவனம்

திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்ற இந்த ரயிலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த ரயில் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டதால் லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் சோதனை செய்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர்.

பிறகு அந்த ரயில் திண்டிவனம் நோக்கி சென்றது. ரயில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். லோகோ பைலட் தண்டவாள விரிசலை முன்கூட்டியே கணித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.