நெல்லை
நெல்லை மாவட்ட ஆட்சியர் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் தமிழக அரசின் நடவடிக்கைகளால் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நெல்லை அருகே நடுக்கல்லூர், கொண்டாநகரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுத்தமல்லி காவல்துறையினருக்கு இது தொடர்பாக புகார்கள் வந்தை தொடர்ந்து சுத்தமல்லி போலீசார் 6 வழக்குகளைபதிவு செய்துள்ளனர்.
வழக்கில் நெல்லையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய லாரியின் உரிமையாளர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் சூப்பர்வைசர் இருவரும் கைது செய்யப்பட்டனர். தேசிய பசுமை தீர்ப்பாயம், மருத்துவ கழிவுகளை கேரள மாநில அரசே அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
கேரளா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.இந்த சூழலில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் தலைமையில் 30 பேர் கொண்ட குழு கேரளாவில் இருந்து இன்று நெல்லை வந்திருந்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன், கேரள மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இன்று நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள கழிவுகளை அகற்றும் பணி முழுவீச்சில் தொடங்கி உள்ளது. கேரளாவில் இருந்து வந்த 30 பேர் கொண்ட குழு தற்போது 6 குழுக்களாக பிரிந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவுகளை அகற்றும் பணியை ஆய்வு செய்த பின் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் ,
”நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது . தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது . நெல்லையில் கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் . கழிவுகளை அப்புறப்படுத்த கூடுதல் லாரிகள் தேவைப்பட்டால் அதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
எனத் தெரிவித்துள்ளார்.