டெல்லி

ன்று மக்களவைய்யில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

நீண்ட காலமாக மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய இந்தக் குழுவினர், கடந்த மார்ச் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தனர்.

மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் மசோதாவை ஏற்றதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் பகல் 12 மணிக்கு மசோதாவை தாக்கல் செய்து பேச உள்ளார்.

மசோதா தாக்கல் செய்யப்படும்போது அவையில் மத்திய உள்துறை அமைசர் அமித் ஷா இருக்கவேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. தற்போது 3 நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்று இன்று டெல்லி திரும்பும் அவர், அவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் அதனை கூட்டுக்குழு விசாரணைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பாஜகவின் அனைத்து எம்.பி.க்களுக்கும் கொறாடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.