சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக் கடிக்கான தடுப்பு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை `அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக’ தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டின் ஜூன் மாதம் வரையில், தமிழ்நாட்டில் 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பதிவாகியுள்ளது. அவர்களில் 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்தாண்டில் 19,795 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 43 பேர் பலியாகியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கு போதிய மருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இருப்பினும், தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனை களிலும், பாம்பு கடிக்கான போதிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை செயலாளர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் 2023ம் ஆண்டு 4,41,804 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 18 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர், அதேபோல 2024 ஜூன் வரை 2,42,782 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 22 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 19,795 பாம்பு கடி சம்பவங்களும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 7,310 பாம்பு கடி சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்தப் பிரச்னைகளை சமாளிக்க, அனைத்து முதன்மை சுகாதார மையங்கள் (PHC) மற்றும் இணைந்த சுகாதார மையங்களில் (CHC) 24 மணி நேரமும் ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (ARV) மற்றும் பாம்பு கடி எதிர்ப்பு தடுப்பூசி (ASV) கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக 10 குப்பிகள் எந்த நேரத்திலும் பயன்படுத்தும் அளவிற்கு தயாராக வைத்து இருக்க வேண்டும். பாம்பு கடி என வருவோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்திய பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.