ஹிஜாப்பை சரியாக அணியாததால் பாதுகாப்பு படையினர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் மாணவி போராட்டத்தில் இறங்கினார்.

டெஹ்ரானில் உள்ள ஆசாத் பலகலைக்கழகத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் மாணவி ஒருவர் தலை துண்டை அணியாததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு படையினர் தாக்கியதை அடுத்து அந்த மாணவி தனது மேலாடைகளை கிழித்தெறிந்து உள்ளாடைகளுடன் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் உள்ளாடையுடன் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிந்த அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட மாணவியின் பெயர் அஹூ தர்யய் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகவில்லை இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

ஏற்கனவே கடந்த 2022-ல் மாஷா அமினி எனும் இளம்பெண் ஹிஜாப் அணியாததால் சிறப்பு பாதுகாப்பு படையினர் தாக்கியதில் பலியானார். அதன் பின் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் 550-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இருப்பினும், 2023 செப்டம்பரில் ஹிஜாப் அணியாமல் பெண்கள் வெளியில் வர தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டதுடன் தலைதுண்டு அணியாமல் வருவதற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.