சென்னை: மழை காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன் லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்,.
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் குறித்த அறிவிப்பை ஒருநாள் முன்னதாகவே ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குறைந்த காற்றழுத்த பகுதி வலுவடைந்துள்ளதால், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கனமழை எச்சரிக்கையால், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழை முடியும் வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், நாளையும் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மாவட்ட ஆட்சியர்களே வெளியிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருநாள் முன்னதாகவே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.