ராம்பான்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளோர் இந்தியாவுக்கு வரலாம் என அழைத்துள்ளார்,
வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1ல் மூன்று கட்டங்களாக யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், சட்டசபை தேர்தல் நடக்கிறது. இது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி இணைந்து போட்டியிடுகிறது. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சிகள் தனியாக தேர்தலை சந்திக்கின்றன.
நேற்று ராம்பான் மாவட்டத்தில் நடந்த பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
”கடந்த 2019 ஆகஸ்டில், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், அங்கு பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. இளைஞர்கள் தற்போது துப்பாக்கிகளுக்கு பதில், லேப்டாப்களை எடுத்துச் செல்கின்றனர். பாஜக தலைமையில் அரசு அமையும் பட்சத்தில், இதுவரை கண்டிராத வளர்ச்சியை, ஜம்மு – காஷ்மீர் அடையும்.
இதைப் பார்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், ‘நாங்கள் பாகிஸ்தானுடன் வாழ விரும்பவில்லை; இந்தியாவுக்குச் செல்கிறோம்’ என்று சொல்லும் அளவுக்கு வளர்ச்சி இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்போரை, வெளிநாட்டவர்களாக, பாகிஸ்தான் நினைக்கிறது. ஆனால் இந்தியா அப்படி நினைக்கவில்லை. அவர்களை சொந்த மக்களாகவே கருதுகிறது; அவர்கள் தாராளமாக இந்தியாவுக்கு வரலாம்”
என்று உரையாற்றி உள்ளார்.