சண்டிகர்
அரியானா மாநில பாஜகவில் வேட்பாளர் பட்டியலில் அதிருப்தி அடைந்த அமைச்சர் மற்றும் எம் எல் ஏ கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. நேற்று பா.ஜ.க.தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்த வேட்பாளர் பட்டியல் 67 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியானபின் அரியானா பாஜகவில் உட்கட்சி பூசல் ஆரம்பமாகி உள்ளது.
நேற்று வெளியான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெயர் அறிவிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த மந்திரி ரஞ்சித் சவுதாலா, எம்.எல்.ஏ. லக்ஷமன் தாஸ் நபா, கட்சியின் ஓ.பி.சி. பிரிவு தலைவர் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
அரியானா மாநிலத்தில் முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மகனான ரஞ்சித் சிங் சவுதாலா எரிசக்தி மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்தார். இவருக்கு ராணியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதால், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
எனவே அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். மேலும் அவர் தனது தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.