தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள் முதலீடு செய்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக அவர்கள் வாங்கியுள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.

இதுதொடர்பாக ஃபெமா (FEMA) சட்டத்தின் 37A மற்றும் 16 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரணை நடத்தியது.

2020ம் ஆண்டு தொடங்கிய இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89 கோடி ரூபாய் மதிப்பிலானா சொத்துக்கள் முடக்கப்பட்டன.

ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் செய்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்த விசாரணையில் அந்நிறுவனங்கள் பல்வேறு ஃபெமா விதிகளை மீறியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், 2017ம் ஆண்டில் சிங்கப்பூரில் இயங்கிவரும் ஒரு ஷெல் நிறுவனத்தின் மூலம் இலங்கையில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகவும். பிறகு இந்த பங்குகளை ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் ஃபெமாவின் விதிகளுக்கு புறம்பாக நடந்துள்ளது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறை ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்துள்ளது.