சென்னை: பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய-எழுதும் நம் சென்னையை கொண்டாடுவோம்  என இன்று சென்னை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த  2004 ஆம் ஆண்டில் இருந்து, ஆகஸ்டு 22ந்தேதி முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல மாறுதல்களைக் கண்ட சென்னை, 2024ல் தனது 385வது வயதை இன்று கொண்டாடுகிறது.

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள். கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை. இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம். பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய – எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.