பாட்னா: யு.பி.எஸ்.சி., லேட்டரல் ஆட்சேர்ப்பு குறித்து, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் அதிருப்தி தெரிவித்து உள்ளார். மோடி அரசின் சிந்தனை முற்றிலும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான மன நிலையில் உள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.
மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயா்பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் தனியாா் துறைகளைச் சோ்ந்த வல்லுநா்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) செய்யப்பட்டு வருகின்றனர். இந்த முடிவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா். இதைத்தொடர்ந்து தற்போது பாஜக கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக பதவியில் உள்ள சிராக் பஸ்வானும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிராக், பிரதமரின் சிந்தனை இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மன நிலையில் உள்ளது. இதில் எனக்கும் எனது கட்சிக்கும் உடன்பாடு இல்லை. சில பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு கோரப்பட்ட விதம், இதில் இடஒதுக்கீடு பரிசீலிக்கப்படாததால், அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருப்பதால், நாங்கள் இந்த கவலையை அரசாங்கத்தின் தகுந்த தளத்தில் பதிவு செய்துள்ளோம்.
அரசுப் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். நானும் இந்த அரசின் ஓர் அங்கமாக திகழ்கிறேன். இனி வரும் நாட்களிலும், அரசுப் பணியிடங்களில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதை ஒவ்வொரு நியமனத்திலும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இன்று நாம் பார்த்ததைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், அரசாங்கம் நிச்சயமாக அதற்கு உரிய இழப்பை சந்திக்கும். எனவே, இதுபோன்ற சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்புவேன். எங்கள் கட்சி தரப்பில் இந்த நடைமுறைக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹாஜிபூர் எம்.பி. – லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ் பஸ்வான் அணி) தலைவர் சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.