டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு போதிய முகாந்திரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், அதனால், நீட் மறு தேர்வு நடத்தப்படாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. கருணை மதிப்பெண் , ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனால், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஏராளமான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இதுதொடர்பாக பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வாக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு மத்தியஅரசு மற்றும், தேசிய தேர்வு முகமைக்கு பல்வேறு உத்தரவை பிறப்பித்ததுடன், பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ, 6 விசாரணை அறிக்கைகளைத் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ”புனிதத் தன்மை பாதிக்கப்பட்டு விட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. நீட் மறுதேர்வு நடத்தப்பட்டால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது அல்ல. நீட் தேர்வு முழுவதிலும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கருணை மதிப்பெண்களால் பாதிப்பட்டிருந்தால் அருகிலுள்ள நீதிமன்றங்களை நாடலாம்.
ஹசாரிபாக், பாட்னா ஆகிய இடங்களில் சுமார் 155 தேர்வர்கள் பயன் அடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதற்காக மொத்தமாக 23 லட்சம் பேர் எழுதிய தேர்வை ரத்து செய்ய முடியாது. இவ்வாறு செய்வதால் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு ஏற்படும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலையில், நீட் இளநிலைத் தேர்வில் கதிரியக்கத் தனிமங்கள் குறித்த சர்ச்சைக்குரிய 19ஆம் கேள்விக்கு 4ஆவது ஆப்ஷன்தான் சரியான விடை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. ஐஐடி டெல்லி இயக்குநர் பேராசிரியர் பானர்ஜி 3 பேர் கொண்ட இயற்பியல் பேராசிரியர்கள் குழுவை நியமித்து, இந்த விடையைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.