தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மதம், இனம், மொழி, ஜாதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது அரசியல் சாசனத்துக்கு கேடு விளைவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட “மாறும் இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம்” என்ற தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப் இவ்வாறு பேசினார்.

“மதம், இனம், மொழி, சாதி ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் மீதான புகார் குறித்து தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறாக இதுபோன்ற புகார்களை நிலுவையில் வைத்திருப்பது தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்திற்கு இழைக்கும் மிகப்பெரிய அநீதி” என்று கூறினார்.