சென்னை:  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கர்நாடக மாநில பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள‌ மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்  இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அவரை  கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் எம்.பி. ரேவண்ணாவின் மகனும், கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கிடையில், தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் ஹசன் தொகுதியில் போட்டியிட்ட ரேவண்ண, தன்னை கைது செய்துவிடுவார்கள் என எண்ணி வெளிநாட்டுக்கு தம்பிக் சென்றார். கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இரவு பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பியோடினார்.  அங்கிருந்து அவரை மீட்டு வர மாநில முதல்வர் சித்தராமையயா மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறார். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர்.

இதற்கிடையில், கர்நாடக மாநில  சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தனர். இதனிடையே, தேவகவுடா உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு பிரஜ்வலுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், அவர் போட்டியிடும் தொகுதியில் மே 26ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், அவர் இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த  இரு நாட்களுக்கு முன்பு  பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்ட வீடியோவில், ‘‘மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என தெரிவித்திருந்தார்.  இதைத்தொடர்ந்து பிரஜ்வல் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்துசேரும் லுஃப்தான்சா விமானத்தில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டின் நகல் ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் பெங்களூரு விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரஜ்வல் விமானத்தில் வந்திறங்கியதும் அவரை  கைது செய்ய முடிவெடுத்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது. இதற்கிடையில், ரேவண்ணா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட  முன் ஜாமீன் வழக்கை விசாரித்த  பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், அதை உடனே விசாரிக்க மறுத்ததுடன், நாளை (மே 31-ம் தேதி) வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.