சென்னை: சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 193 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடுஅரசு கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அடுத்த பரந்தூரில் பிரமாண்டமான முறையில் பசுமை விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடுஅரசு தீவிரம் காட்டி வருவதால், மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக கையப்படுத்தட இருந்த 193 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சென்னை விமான நிலையம், போக்குவரத்து நெரிசல் மிக்கதாக காணப்படுகிறது. அதனால் பரந்தூர் பகுதியில் பிரமாண்டமான முறையில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடுஅரசு முடுக்கி விட்டுள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அந்த பகுதியில் வசித்து வரும் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், தற்போதைய சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 193 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்படும் என கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அறிவித்தது. தற்போது, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையம் 1,317 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது, இது இந்தியாவின் மற்ற பெரிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியதாகும். அதனால், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த 133 ஏக்கர் நிலமும், சாலை இணைப்புக்காக கூடுதலாக 60 ஏக்கர் நிலமும் தேவை என இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) கூறியுள்ளதாக விமான நிலைய இயக்குனர் டாக்டர் சரத்குமார் 2023ம் ஆண்டு பிப்ரவரியில் தெரிவித்திருந்தார்.
இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், அடையாறு ஆற்றின் மறுகரையில் சர்வதேச முனையம் மற்றும் சரக்கு முனையம் அமைக்க 306 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசுக்கு AAI கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது. மேலும், விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்கு அரசு நிலம் மட்டுமின்றி, தனியார் நிலமும் விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் டிசம்பர் 2024 க்குள் முடிவடையும். இது 35 மில்லியன் பயணிகளின் திறனை அதிகரிக்கும். 55 மில்லியன் பயணிகளைக் கையாள விமான நிலையத்திற்கு கூடுதல் ஏப்ரான் விரிகுடாக்கள் தேவை என கூறப்பபட்டது.
இந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையம் விரிவாக்கம் திட்டத்தை தமிழ்நாடு கைவிட்டு உள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக, விமான நிலைய விரிவாக்கம் பணிக்காக கையகப்படுத்தப்பட இருந்த 193 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடுஅரசு கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சர்வதேவ பசுமை விமான நிலையம் அமைப்பதில் கவனம் செலுத்துகிறது.