கோழிக்கோடு: தவறாக வழிநடத்தும் மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில் பதஞ்சலி ஆயுர்வேத இணை நிறுவனர் பாபாராம்தேவ் மற்றும் அதன் எம்டி ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் ஜூன் 3, 2024 அன்று நேரில் ஆஜராகுமாறு கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பரப்பரப்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கேரள நீதிமன்றமும் வழக்கின் விசாரணைக்கு நேரில்  ஆஜராக பாபா ராம்தேவ்.  பால்கிருஷ்ணாவுக்கு  உத்தரவிடப்பட்டு   உள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் செய்வதாகவும், நிறுவனத்தின் மருந்துப்பொருள்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில்  பதஞ்சலி ஆயுர்வேதா லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் போது, “விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது. பதஞ்சலி நிறுவனத்தின் பொய்யான மற்றும் தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து விளம்பரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் மீண்டும் நீதிமன்றம் தலையிட்டு விளம்பரங்களை நிறுத்த உத்தரவிட்டது.  மேலும்,  “பாபா ராம்தேவின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் என்ன… இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்” என காட்டமாகத் தெரிவித்தனர்.  இதையடுத்து இருவரும் மன்னிப்பு கோரினர் ஆனால் நீதிமன்றம் அதை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து பதஞ்சலி தரப்பில் பிரம்மான பத்திரம்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  நான்    நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன். இந்த தவறுக்கு நான் உண்மையிலேயே வருந்துகிறேன், மேலும் இது மீண்டும் நடக்காது என்று மாண்புமிகு நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறேன் ”என்று ராம்தேவ் பிரமாணப் பத்திரத்தில் கூறி இருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்க மறுப்பு தெரிவித்து காட்டமாக விமர்சனம் செய்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கேரள மாநிலத்திலும் தவறான விளம்பரங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோழிக்கோடு உதவி மருந்துக் கட்டுப்பாட்டாளர்,  மருந்து மற்றும் மந்திர தீர்வுகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954ன் கீழ்  பதஞ்சலி நிறுவனம் மீது புகார் அளித்துள்ளார்.

இந்த புகார்மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ள நீதிமன்றம்,  வழக்கின் விசாரணைக்கு பதஞ்சலி ஆயுர்வேத இணை நிறுவனர் பாபாராம்தேவ் மற்றும் அதன் எம்டி ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  ஜூன் 3ந்தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இதே வழக்கில் கேரள நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.