கொல்கத்தா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றிய அவதூறு கருத்துக்காக பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் 25-ந்தேதி இங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கடந்த 15 ஆம் தேதி ஹல்தியா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குறித்து தரக்குறைவான முறையில், மிகவும் மோசமான விமர்சனத்தை முன்வைத்ததாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
அவருடைய பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
கடந்த 17 ஆம் தேதி அபிஜித்துக்கு தேர்தல் ஆணையம் இது குறித்து நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் நேற்று 20ம் தேதி அதற்கு அவர் விளக்கம் அளித்து இருந்தார். ஆனால், அபிஜித்தின் பேச்சுக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
எனவேஇன்று மாலை 5 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அபிஜித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவெளியில் பேசும் போது கவனத்துடன் பேச வேண்டும் எனவும் அவரை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.