சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா? என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேரள மாநில அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
திமுக அரசு, இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்களுடன் சகோதரத்துடன் பழகி வருகிறது. ஆனால், அந்த மாநிலங்கள் தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி, தமிழ்நாடு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரியில் முறையாக தண்ணீர் திறந்துவிட மறுத்து வருவதுடன், மேகதாதுவிலும் அணை கட்டியே தீருவோம் என தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க பிடிவாதம் பிடித்து வருகிறது.
இதுபோல ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களும் தமிழ்நாட்டுக்கு வரும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமித்து வரும் நிலையில், தற்போது திமுகவின் இண்டியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி செய்து வரும் கேரள மாநில அரசும், தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அதாவது, தமிழ்நாட்டுக்கு வரும் அமராவதி அணையின் நீர்வரத்தை தடுக்கும் வகையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே, மலைச்சரிவில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் தென்மாவட்ட விவசாயமும் பொய்த்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை கண்டிக்க வேண்டிய தமிழ்நாடு (திமுக) அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் நேரடியாக பேசாமல், மவுனம் சாதித்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், சிலந்தி ஆற்றில் கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த மனு கொடுக்கப்பட்டு உள்ளது. மனுவில், கேரளா இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகா, வட்டவடா பஞ்சாயத்து, பெருகுடா பகுதியில், சிலந்தி ஆற்றின் குறுக்கே, மலைச்சரிவில் அமராவதி அணையின் நீர்வரத்தை தடுக்கும் வகையில், கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. சிலந்தி நீர் வீழ்ச்சிக்கு அருகே கட்டப்பட்டு வரும் தடுப்பணையால், கம்பக்கல் மலைச்சரிவிலிருந்து, மஞ்சம்பட்டி வழியாக, தேனாறுக்கு வரும் நீர் தடுக்கப்படுகிறது. இதனால், அமராவதி பாசன பகுதிகள் பாதிக்கும். எனவே, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, அமராவதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமராவதி பாசன கோட்ட அதிகாரிகள் குழு, கேரள அரசு அணை கட்டும் பகுதியை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுமீது விசாரணை நடத்திய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயமை, சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல்துறை மற்றும் தேசிய வன விலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியது. மேலும், உரிய அனுமதி பெறவில்லை என்றால் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேளர அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக, கேரள அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.