டெல்லி:  டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் மீது திடீர் தாக்குதல்  நடத்தப்பட்டது. இந்த விவகாரம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது.  காங்கிரஸ் கட்சி சார்பில், டெல்லி வடகிழக்கு தொகுதியில்  வேட்பாளராக கன்னையா குமார் களமிறங்குகிறார்.  அவரை எதிர்த்து,  பா.ஜ.க. சார்பில் இரு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தப்பட்டது . டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் புகார் தெரிவித்தார். அதில், சில நபர்கள் கன்னையா குமாருக்கு மாலை அணிவித்ததாகவும், அதன்பின் அவர்கள் கன்னையா மீது மையை பூசி அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னையா குமார் கூறுகையில், தாக்குதலின் பின்னணியில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் திவாரி இருக்கிறார். தனது புகழ் அதிகரித்து வருவதால் விரக்தியில் இருக்கும் மனோஜ் திவாரி ரவுடிகளை அனுப்பி இதனை செய்துள்ளார் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.