டெல்லி
பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை முன்னாள் பீகார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலமானார். சுமார் 72 வயதான அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில்,
“கட்சியில் எனது மதிப்புமிக்க சக தொண்டரும், பல தசாப்தங்களாக எனது நண்பராக இருந்தவருமான சுஷில் மோடியின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பாஜகவின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார்.
அவர் கடின உழைப்பாளியாகவும், அன்புக்குரிய எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். அரசியல் தொடர்பான விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டவர். ஒரு நிர்வாகியாகப் பாராட்டத்தக்க பல பணிகளைச் செய்தார். ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றுவதில் அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில்,
“நமது மூத்த தலைவர் சுஷில் குமார் மோடியின் மறைவுச் செய்தியால் நான் வருந்துகிறேன். இன்று பீகார் அரசியல் ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது. ஏ.பி.வி.பி. முதல் பா.ஜனதா வரை, சுஷில் அமைப்பு மற்றும் அரசாங்கத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தார். அவரது அரசியல் வாழ்க்கை ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவரது மறைவால் பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீண்ட நாட்களுக்கு நிரப்ப முடியாது. இந்த துயர நேரத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் ஒட்டுமொத்த பா.ஜனதாவும் நிற்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்”
என்று பதிவிட்டுள்ளார்.